இத்தாலிய தேசிய பயணியர் விமானப் போக்குவரத்து ஆணையத்தினர் சந்திப்பு இத்தாலிய தேசிய பயணியர் விமானப் போக்குவரத்து ஆணையத்தினர் சந்திப்பு 

திருத்தந்தை: வான்வெளி அமைதியான பகுதியாக மட்டுமே இருக்கவேண்டும்

விமானப் போக்குவரத்துகள், தொலைதூரத்திலுள்ள மக்கள், தேசிய எல்லைகளையும் கடந்து ஒருவர் ஒருவரை அறியச் செய்வதன் வழியாக உலகின் முன்னேற்றத்துக்கு உதவுகின்றன - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

பயணிகள் விமானப் போக்குவரத்துகள், உலக அளவில் மனித மற்றும், சமுதாய உறவுகளைப் பேணிவளர்க்கும் முக்கியமான பணியைக் கொண்டிருக்கும் அதேநேரம், விமானங்கள், குற்றச்செயல்கள், அழிவுகள் மற்றும், மரணங்கள் ஆகியவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, இதனை தற்போது உக்ரைனில் இடம்பெற்றுவரும் பயங்கரமான போரிலும் கவலையோடு பார்த்து வருகிறோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

பாதுகாப்பான விமானப் போக்குவரத்துகளுக்குப் பொறுப்பான ENAC எனப்படும் இத்தாலிய தேசிய பயணியர் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள், பணியாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரை, வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில், மே 13, இவ்வெள்ளியன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.

உக்ரைனில் ஒவ்வொரு நாளும் விமானங்கள் குண்டுவீச்சுக்களை நடத்திவருவதைக் கவலையோடு குறிப்பிட்ட திருத்தந்தை, விமானங்கள் அழிவைக்கொணர்ந்துவரும் இந்நிலையில், வான்வெளி, எப்போதும் அமைதியான பகுதியாக மட்டுமே இருக்கவேண்டும், அவ்வாறு அமைந்திருப்பதன் வழியாக, விமானங்கள் அமைதியான சூழலில் பறக்கவேண்டும் என்ற நம் ஆவல்கள் நிறைவேறும் என்றும், இது, நட்புறவுகளைப் பேணிக்காக்க உதவும் என்றும் எடுத்துரைத்தார்.   

விமானப் போக்குவரத்து, நட்புறவையும், சந்திப்பையும் உருவாக்குவதாகும் என்றும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானப் போக்குவரத்துகளால் இடம்பெறும் பெரும் விபத்துகளைத் தடுப்பதற்கு, இந்த இத்தாலிய தேசிய ஆணையம் மேற்கொண்டுவரும் முயற்சிகளை ஊக்கப்படுத்தியுள்ள திருத்தந்தை, இப்போக்குவரத்துப் பணியில் ஒவ்வொரு பயணியர், மற்றும் மனிதரின் மதிப்பு நினைவுகூரப்படுவதற்கு, இந்த ஆணையத்தின் தேசிய நாள் நல்ல வாய்ப்பாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆணையத்தின் சமய உணர்வைப் பாராட்டிய திருத்தந்தை, இந்த ஆணையத்தின் பணியாளர்கள் தங்களுக்கிடையே ஒருமைப்பாடு, நேர்மை மற்றும், நட்புறவை வளர்க்குமாறும், இது, இன்னலான சூழல்களிலும்கூட நம்பிக்கையோடு அதனை எதிர்கொள்ள உதவும் என்றும் கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்ட துறைகளில் விமானப் போக்குவரத்தும் ஒன்று என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய தேசிய பயணியர் விமான போக்குவரத்தின் பாதுகாவலராகிய லொரேத்தோ அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுமாறும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 May 2022, 16:25