நைஜீரியாவில் வன்முறைக்கு பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்
மேரி தெரேசா: வத்திக்கான்
நைஜீரியா நாட்டின் Ondo மறைமாவட்டத்தில் பெந்தக்கோஸ்து பெருவிழாவன்று, கத்தோலிக்க ஆலயம் ஒன்று பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டுள்ளவேளை, அம்மறைமாவட்ட ஆயர், மற்றும், கத்தோலிக்கருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆன்மீக அருகாமை மற்றும், செபங்களைத் தெரிவிக்கும் தந்திச்செய்தி ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
ஜூன் 05, இஞ்ஞாயிறன்று, Owo நகரின் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் கத்தோலிக்கர் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாத் திருப்பலியில் பங்குபெற்றுக்கொண்டிருந்தபோது, அவ்வாலயத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்து சுட்டத்தில் பல சிறார் உட்பட, ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வார்த்தையால் வெளிப்படுத்தப்பட முடியாத அளவுக்கு கவலையை அளித்துள்ள இத்தாக்குதலில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும், அவர்களின் குடும்பத்தினருக்கு தன் செபங்களையும், உடனிருப்பையும் தெரிவித்துள்ள திருத்தந்தை, அக்கத்தோலிக்கர், பிரமாணிக்கம், மற்றும், துணிச்சலோடு, நற்செய்தியை தொடர்ந்து வாழுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
வெறுப்பு, மற்றும், வன்முறையால் நிறைந்துள்ள மனங்கள் மனமாற்றம் அடையவும், இதன் வழியாக அவர்கள் அமைதி மற்றும், ஏற்புடைமைப் பாதைகளைத் தெரிவுசெய்யவும் அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகவும் திருத்தந்தை கூறியுள்ளார்.
மரணத்தை வருவித்த இக்கொடூரமான தாக்குதல் குறித்த திருத்தந்தையின் ஆழ்ந்த கவலை, மற்றும், செபங்களைத் தெரிவிக்கும் இத்தந்திச் செய்தியை, திருத்தந்தையின் பெயரில், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், Ondo மறைமாவட்ட ஆயர் Jude Arogundade அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்