திருத்தந்தை: உணவை, போரின் ஆயுதமாகப் பயன்படுத்தவேண்டாம்

உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதி தடைசெய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கின்றது, இந்த தானியத்தையே நம்பியே, இலட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைன் நாட்டில் ஏறத்தாழ நூறு நாள்களாக இடம்பெற்றுவரும் போரினால், உலக அளவில் தானியப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறித்து, தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ள அதேநேரம், போரின் ஆயுதமாக உணவு பயன்படுத்தப்படக் கூடாது என்று  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூன் 01, இப்புதன் காலையில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த மக்களுக்கு, முதுமை குறித்த புதன் பொது மறைக்கல்வியுரையின் 12வது பகுதியை வழங்கியபின்னர், உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதி தடைசெய்யப்படுவது நிறுத்தப்படுமாறு அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உணவு பெறுவதற்குரிய உலகளாவிய உரிமைக்கு உறுதி வழங்கப்பட எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உக்ரைனிலிருந்து கோதுமை ஏற்றுமதி தடைசெய்யப்படுவது மிகுந்த கவலையளிக்கின்றது எனவும், இந்த உணவு தானியத்தை நம்பியே, உலகில் இலட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக, மிக வறிய நாடுகளின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

உலகில் இலட்சக்கணக்கான மக்கள் நம்பி வாழ்கின்ற முக்கிய உணவாகிய கோதுமையை, போரின் ஆயுதமாகப் பயன்படுத்தவேண்டாம் என்று கெஞ்சிக்  கேட்பதாகத் தெரிவித்த திருத்தந்தை, உக்ரைனை இரஷ்யா ஆக்ரமித்ததிலிருந்து, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போரால் உலகெங்கும் இந்த கோதுமை உணவுப் பற்றாக்குறை உருவாகியுள்ளது எனவும் கவலை தெரிவித்தார்.

மேலும் இப்புதன் மறைக்கல்வியுரையில் போர்த்துக்கீசிய திருப்பயணிகளை வாழ்த்தியபோது, உக்ரைனில் அமைதி நிலவ அன்னை மரியாவிடம் செபிப்போம் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.

உலகில் அமைதி நிலவ திருத்தந்தை

உக்ரைனில் அமைதி நிலவவேண்டும் என்றும், உக்ரைன் மற்றும், உலகின் மற்ற பகுதிகளில் இடம்பெற்றுவரும் போர்கள் முடிவுக்கு வரவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எண்ணற்ற விண்ணப்பங்களை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 31, இச்செவ்வாய் மாலையில், உரோம் மேரி மேஜர் பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதியின் அரசியாம் அன்னை மரியாவிடம் உலக சமுதாயத்திற்கு அமைதி எனும் கொடையை நல்குமாறு உருக்கமாகச் செபித்தார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் 25ம் தேதி, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில், மனித சமுதாயம் முழுவதையும், குறிப்பாக, இரஷ்யாவையும், உக்ரைனையும் அன்னை மரியாவின் களங்கமில்லா திரு இதயத்திடம் திருத்தந்தை அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 June 2022, 14:00