ஜூன் 26,2022 ஞாயிறு மூவேளை செப உரை ஜூன் 26,2022 ஞாயிறு மூவேளை செப உரை  

ஈக்குவதோர் மக்கள் வன்முறையைக் கைவிட அழைப்பு

மரணம், அழிவு மற்றும், துன்பங்களைத் தொடர்ந்து கொணரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களை நம் செபங்களிலும், இதயங்களிலும் மறக்காமல் வைத்திருப்போம் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஜூன் 26, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கியபின்னர், வன்முறைகள் இடம்பெறும் ஈக்குவதோர் மற்றும், உக்ரைன் நாடுகளில் அமைதி திரும்பவேண்டும் என்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்தார்.

தென் அமெரிக்க நாடான ஈக்குவதோரில் உணவு மற்றும், எரிபொருள்களின் விலையேற்றத்தால், அண்மை வாரங்களில் அந்நாட்டில் வன்முறையுடன்கூடிய போராட்டங்கள் இடம்பெறுவது கவலை தருகின்றது என்றுரைத்த திருத்தந்தை, அனைத்து தரப்பினரும் வன்முறைகளைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

ஈக்குவதோர் மக்களோடு, குறிப்பாக, சமுதாயத்தின் விளிம்பில் உள்ளோர், மற்றும், வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்வோருடன் தன் உடனிருப்பைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, அனைத்து மக்கள், மற்றும், நிறுவனங்களின் உரிமைகள் எப்போதும் மதிக்கப்படவேண்டும் எனவும், உரையாடல் வழியாக மட்டுமே அமைதியை எட்டமுடியும் எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஈக்குவதோரில் இரு வாரங்களாக இடம்பெற்ற வன்முறை போராட்டங்களுக்குப்பின், தற்போது பதட்டநிலைகள் குறைந்து, அரசுத்தலைவர் Gulliermo Lasso அவர்கள், வருங்காலம் குறித்த கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தியுள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன. 

உக்ரைனில் அமைதி நிலவ...

மேலும், மரணம், அழிவு மற்றும், துன்பங்களைத் தொடர்ந்து கொணரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களை நம் செபங்களிலும், இதயங்களிலும் மறக்காமல் வைத்திருப்போம் எனவும், அந்நாட்டில் இரஷ்யாவின் ஆக்ரமிப்பால் இடம்பெறும் போர் முடிவுக்கு வரவேண்டும் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2022, 12:40