ஹெய்ட்டியில் கொல்லப்பட்டுள்ள அருள்சகோதரியின் பணிக்கு பாராட்டு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
ஜூன் 25, இச்சனிக்கிழமையன்று ஹெய்ட்டி நாட்டில் கொலைசெய்யப்பட்டுள்ள 65 வயது நிரம்பிய இத்தாலிய அருள்சகோதரி Luisa Dell’Orto அவர்களின் குடும்பத்திற்கும், அச்சகோதரியின், நற்செய்தியின் சிறிய சகோதரிகள் துறவு சபைக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 26, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரை வழங்கியபின்னர், ஹெய்ட்டியில் அருள்சகோதரி லூயிசா அவர்கள், மறைசாட்சியத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு தன் வாழ்வை மற்றவருக்கு ஒரு கொடையாகக் கொடுத்திருந்தார் என்று சொல்லி, அச்சகோதரியின் பணிகளையும் பாராட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
மறைப்பணி குழு ஒன்றுக்கு, கடந்த ஆண்டில் எழுதிய மடலில், ஹெய்ட்டி நாட்டில், தான் தொடர்ந்து பணியாற்ற எடுத்த தீர்மானத்தை தெரிவித்திருந்த அருள்சகோதரி லூயிசா அவர்கள், நாம் பார்க்கின்ற மற்றும், கேள்விப்படுகின்ற காரியங்களுக்குமுன் மௌனம் காக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹெய்ட்டி நாட்டுத் தலைநகர் Port-au-Princeல், இருபது ஆண்டுகளுக்கு மேலாக மறைப்பணியாற்றிவந்த அச்சகோதரி, எல்லாவற்றுக்கும் மேலாக, தெருச்சிறாருக்குப் பணியாற்றுவதற்கு தன் வாழ்வை அர்ப்பணித்திருந்தார்.
இச்சனிக்கிழமையன்று Port-au-Prince நகர்த் தெருக்களில் ஆயுதம் ஏந்திய தாக்குதல்கள் இடம்பெற்றபோது கடுமையாய் காயமடைந்த அருள்சகோதரி லூயிசா அவர்கள், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சிறிதுநேரத்திலேயே உயிர்துறந்தார்.
நைஜீரியாவில் கத்தோலிக்க அருள்பணியாளர்கள் கொலை
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவிலும், Edo மற்றும், Kaduna மாநிலங்களில் கடத்தல்காரர்களால், 41 வயது நிரம்பிய அருள்பணி Christopher Odia அவர்களும், 50 வயது நிரம்பிய அருள்பணி Vitus Borogo அவர்களும் கடந்தவார இறுதியில் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்