மறைக்கல்வியுரை: கிறிஸ்தவ சமுதாயம் முதியோருக்கு உதவவேண்டும்
மேரி தெரேசா: வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 15, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 8.30 மணிக்கெல்லாம், இந்நாளைய தன் பணியைத் துவக்கினார். திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்திலுள்ள சிறிய அறையில், தன்னைச் சந்திக்க காத்திருந்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஆயுதக்களைவு விவகாரத்துறையின் நேரடிப் பொதுச்செயலர் Izumi Nakamitsu அவர்களை முதலில் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ். அதற்குப்பின்னர், வத்திக்கானின் புனித பேதுரு வளாகம் சென்று, அங்கு வெயிலையும் பொருட்படுத்தாது அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு, முதுமை பற்றிய தன் 14வது மறைக்கல்விப் பகுதியில், இயேசுவால் குணமடைந்த பேதுருவின் மாமியார் பற்றிய தன் எண்ணங்களை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைந்தது பற்றிய மாற்கு நற்செய்திப் பகுதி, பல மொழிகளில் முதலில் வாசிக்கப்பட்டது. அதற்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார்.
பின்பு, அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள். சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார் (1,29-31).
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். மாற்கு நற்செய்தியில், பேதுருவின் மாமியார் குணமடைந்த, மிகவும் எளிமையான மற்றும் மனதைத் தொடும் நிகழ்ச்சிக்குச் செவிமடுத்தோம். இப்பகுதி மற்ற இரு ஒத்தமை நற்செய்திகளிலிருந்து சிறிது வேறுபட்டுள்ளது. மாற்கு நற்செய்திப்படி, இப்புதுமை நடைபெற்றபோது, சீமோன், பேதுரு என அழைக்கப்படவில்லை. இந்நற்செய்தியாளர், சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார் என்று எழுதியுள்ளார். அது சாதாரண காய்ச்சலா என்பதுபற்றி நமக்குத் தெரியாது. ஆயினும் முதுமையில், காய்ச்சல்கூட ஆபத்தானதாக இருக்கின்றது. முதுமையில் உடம்பு, நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்காது. அதனால் அந்த வயதில் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பதைத் தேர்வுசெய்வதற்குத் தெரிந்துவைத்திருக்கவேண்டும். காய்ச்சலாய்க் கிடந்த சீமோனின் மாமியார் அருகில் இயேசு சென்று, அவர் கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார் என்று நற்செய்தியாளர் மாற்கு நமக்குச் சொல்கிறார் (காண்க 1:29-31). இயேசு, பேதுருவின் மாமியாரை, தம் சீடர்களோடு இருக்கையில் குணமளிக்க விரும்பினார். கிறிஸ்தவ சமுதாயம் முழுவதும், தேவையில் இருக்கின்ற நம் சகோதரர், சகோதரிகளுக்கு உதவுவதற்கு அழைக்கப்பட்டுள்ளது என்பதை, இந்நிகழ்வு நமக்கு நினைவுபடுத்துகின்றது. நம் சமூகங்களில், தனிமை மற்றும், கைவிடப்பட்டநிலையைக்கூட உணர்கின்ற வயதுமுதிர்ந்தோர் பலர் உள்ளனர். இவர்களைப் போன்றவர்களுக்கு உதவுவதன் வழியாக, கிறிஸ்துவின் மீட்பையும், நற்செய்தி வழங்கும் நம்பிக்கையையும் அறிவிக்கிறோம். காய்ச்சலிலிருந்து குணமடைந்தவுடன் பேதுருவின் மாமியார் எழுந்து தன் விருந்தினர்களுக்கு உடனடியாகப் பணிவிடைபுரிந்ததன் வழியாக அவர் கடவுளின் இரக்கம் எனும் கொடைக்கு நன்றியோடு பதிலளித்தார். கிறிஸ்தவ சமுதாயத்திற்குள்ளும், முதியோர், நம்பிக்கை எனும் கொடை, மற்றும், தங்கள் வாழ்வில் ஆண்டவரின் குணமடைதலால் தொடப்பட்ட அனுபவம் ஆகியவற்றுக்கு நன்றியுணர்வோடு எடுத்துக்காட்டான விலைமதிப்பற்ற ஒரு சேவையை வழங்க முடியும். கிறிஸ்தவ சீடத்துவம், நம் வாழ்வைத் தொடுகின்ற மற்றும், மாற்றுகின்ற இரக்கம்நிறை அன்பிற்கு நன்றியோடு இருக்கவேண்டும் என்ற உணர்வால் தூண்டப்படுகின்ற, பிறரன்புச் செயல்களில் வெளிப்படுத்தப்படுகிறது என்பதை வயதுமுதிர்ந்தோர் நமக்குக் கற்றுத் தருகின்றனர். ஆண்டவர் வயதுமுதிர்ந்தோரை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை, மாறாக, பணிவிடைபுரிவதற்கு அவர்களுக்குச் சக்தியைக் கொடுக்கிறார். ஆதலால் அவர்கள் சமுதாயத்தினின்று ஒதுங்கி நிற்கும் சோதனைகளை வெல்வதற்கு அழைக்கப்படுகின்றனர். கிறிஸ்தவ சமுதாயமும், முதியோரைச் சந்தித்து அவர்களுக்கு உதவவேண்டும்
இவ்வாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மறைக்கல்வியுரையில், பேதுருவின் மாமியார் குணமடைந்தவுடன் உடனடியாக பணிவிடை புரிந்தது பற்றிய சிந்தனைகளை வழங்கினார். பின்னர் உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர் குறித்து குறிப்பிட்ட திருத்தந்தை, அங்கு நடைபெறும் போர் மக்களைத் தியாகப்பலியாக்குகிறது என்றுரைத்து, அந்நாட்டில் போர் நிறுத்தப்பட அழைப்புவிடுத்தார். இறுதியில், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும் அமைதியும், உங்கள் அனைவர் மீதும் பொழியப்படுவதாக என திருப்பயணிகளுக்காகச் செபித்து, எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரை அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்