இயேசுவின் திருஇதய கொம்போனி மறைப்பணியாளர் சபை இயேசுவின் திருஇதய கொம்போனி மறைப்பணியாளர் சபை 

திருத்தந்தை: இயேசு இன்றி நம்மால் எதுவும் செய்ய இயலாது

1867ம் ஆண்டு புனித தானியேல் கொம்போனி என்பவரால் தொடங்கப்பட்ட, கொம்போனி மறைப்பணியாளர் சபை, உலகின் 41 நாடுகளில், ஏழைகள் மற்றும், கைவிடப்பட்டோருக்குப் பணியாற்றி வருகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

நாம் செய்வதனைத்தும் கிறிஸ்து, மற்றும், தூய ஆவியாரை முழுவதும் சார்ந்திருக்கின்றன என்றும், கடவுள் துணையின்றி நம்மால் எதுவுமே ஆற்ற முடியாது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, மறைப்பணியாளர் சபை ஒன்றிடம் கூறியுள்ளார்.

உரோம் நகரில் இயேசுவின் திருஇதய கொம்போனி மறைப்பணியாளர் சபையின் 19வது பொதுப்பேரவையில் பங்குபெற்றுவரும் எழுபது பிரதிநிதிகளை ஜூன் 18, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறியுள்ளார்.  

உலக அளவில் கொம்போனி மறைப்பணியாளர் சபை ஆற்றி வருகின்ற பணிகளை ஊக்கப்படுத்திப் பேசிய திருத்தந்தை, ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும் மறைப்பணியாளர்கள் கடவுளன்பின் வாய்க்கால்கள் என்றும், இயேசு மற்றும், தூய ஆவியாரால் வழிநடத்தப்படும்போது மட்டுமே நம் செயல்கள் கனிகொடுக்கும் என்றும் குறிப்பிட்டார்.

என்னைவிட்டுப் பிரிந்து....

“நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள் (யோவா.15:5): கொம்போனியோடு இணைந்து கிறிஸ்துவில் வேரூன்றப்படல்” என்ற இப்பொதுப் பேரவையின் தலைப்பு மற்றும், இச்சபையின் விருதுவாக்கை, தன் உரையில் நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது' (யோவா.15:5) என இயேசு தம் திருத்தூதர்களிடம் வலியுறுத்திக் கூறியதை நினைவுபடுத்தினார்.

கொம்போனி மறைப்பணியாளர் சபை
கொம்போனி மறைப்பணியாளர் சபை

என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் சிறிதளவு செய்யமுடியும் என்று இயேசு கூறவில்லை, மாறாக, அவர் எதுவுமே செய்ய இயலாது என்று கூறியதன் அர்த்தம் என்ன என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை, நாம் பல முன்னெடுப்புக்களையும், திட்டங்களையும் ஆற்றலாம், ஆனால் இயேசுவிலும், தூய ஆவியாரிலும் நாம் நிலைத்திருந்து அவற்றை ஆற்றாவிட்டால் நாம் ஆற்றும் அனைத்தும் அவரது கண்களில் ஒன்றுமில்லாமல் தெரியும், இறையாட்சிக்கும் மதிப்பற்றதாக இருக்கும் என்று கூறினார்.

மறைப்பணியாளர்கள், தங்களின் கரங்கள், மனங்கள், மற்றும், இதயத்தை ஆண்டவரோடு ஒன்றிணைக்கும்போது, அவை கிறிஸ்துவின் அன்பின் வாய்க்கால்களாக ஆகின்றன எனவும், இவர்கள் தூய ஆவியாருக்குப் பணிந்து நடக்கவேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.  

1867ம் ஆண்டு புனித தானியேல் கொம்போனி என்பவரால் தொடங்கப்பட்ட, கொம்போனி மறைப்பணியாளர் சபை, உலகின் பல நாடுகளில், ஏழைகள் மற்றும், கைவிடப்பட்டோருக்குப் பணியாற்றி வருகின்றது. இச்சபையினர், பெரும்பாலும் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்ற மக்கள் மத்தியிலும், உறுதியற்ற அரசியல் சூழல் உள்ள இடங்களிலும் மறைப்பணியாற்றி வருகின்றனர். இச்சபையின் ஏறத்தாழ 3,500 பேர் ஏறத்தாழ 41 நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2022, 14:54