Collemaggioவின் அன்னை மரியா பசிலிக்கா, L'Aquila Collemaggioவின் அன்னை மரியா பசிலிக்கா, L'Aquila 

ஆகஸ்ட் 28ல், திருத்தந்தை L'Aquila நகரத்தைப் பார்வையிடுகிறார்

திருத்தந்தை 5ம் செலஸ்டின் அவர்கள் வழங்கிய, ஆண்டு நிறைபேறுபலன்களை, “மன்னிப்பு வழிபாடாக” அக்குய்லா நகர கத்தோலிக்கர், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் 28, 29 ஆகிய இரு நாள்களில் சிறப்பிக்கின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில், இத்தாலியின் L'Aquila நகரத்திற்கு ஒருநாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டு, மன்னிப்பு வழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றுவார் என திருப்பீடம், ஜூன் 4 இச்சனிக்கிழமையன்று அறிவித்துள்ளது.

2009ம் ஆண்டில் கடுமையான நிலநடுக்கத்தால் சேதமடைந்த, மத்திய இத்தாலியிலுள்ள   Abruzzo மாநிலத்தின் L'Aquila நகருக்கு, வருகிற ஆகஸ்ட் 28ம் தேதி செல்லத் திட்டமிட்டுள்ள திருத்தந்தை, அந்நகரில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் மன்னிப்பு வழிபாட்டை நிறைவேற்றுவார். மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களோடு தன் ஒருமைப்பாட்டுணர்வையும் திருத்தந்தை தெரிவிப்பார்.

திருத்தந்தை 5ம் செலஸ்டின் அவர்கள் வழங்கிய, நிரந்தர நிறைபேறுபலன்களை, “மன்னிப்பு வழிபாடாக” அக்குய்லா நகர கத்தோலிக்கர், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் 28, 29 ஆகிய இரு நாள்களில் சிறப்பிக்கின்றனர்.

மேலும், திருத்தந்தை L’Aquila நகருக்குச் செல்லவிருப்பதை வரவேற்றுப் பேசியுள்ள, அந்நகரின் பேராயர் கர்தினால் Giuseppe Petrocchi அவர்கள், திருத்தந்தை 5ம் செலஸ்டின் அவர்கள் இந்நிறைபேறுபலன்களை வழங்கியதற்குப் பின்னர், 728 ஆண்டுகள் சென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களே, அந்நிகழ்வுக்கு வருகின்ற முதல் திருத்தந்தை என்று கூறியுள்ளார். அந்நிகழ்வில் திருத்தந்தை, புனிதக் கதவையும் திறந்து வைப்பார் எனவும் கர்தினால்  Petrocchi அவர்கள் கூறியுள்ளார்.

21 புதிய கர்தினால்கள்

ஆகஸ்ட் 27ம் தேதி, 21 புதிய கர்தினால்களுக்கு சிவப்புதொப்பி வழங்கும் நிகழ்வை நடத்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நிகழ்வில் கலந்துகொள்ளும் கர்தினால்கள், புதிய கர்தினால்கள் என அனைவரும், ஆகஸ்ட் 27,28,29 ஆகிய மூன்று நாள்களில், திருப்பீடத் தலைமையகத்தின் சீர்திருத்தம் குறித்த Praedicate Evangelium திருத்தூது கொள்கை விளக்கம் குறித்து சிந்திக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார். இப்புதிய திருத்தூது கொள்கை விளக்கம், ஜூன் 5 இஞ்ஞாயிறன்று நடைமுறைக்கு வருகிறது.

"Casa Hogar Deutschland" அமைப்பின் பிரதிநிதிகள்
"Casa Hogar Deutschland" அமைப்பின் பிரதிநிதிகள்

இன்னும், கொலம்பியா நாட்டின் மேற்கேயுள்ள Chocoவில், சிறாருக்கு கல்வி மற்றும், ஏனைய உதவிகளை ஆற்றுகின்ற "Casa Hogar Deutschland" என்ற அமைப்பின் 14 பிரதிநிதிகளையும் இச்சனிக்கிழமை காலையில் திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2022, 15:34