திருத்தந்தை பிரான்சிஸ், கனடா பூர்வீக இனத்தவர்  திருத்தந்தை பிரான்சிஸ், கனடா பூர்வீக இனத்தவர்  

திருத்தந்தையின் கனடா திருத்தூது பயணத் திட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடா நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் (ஜூலை 24-29,2022), குணப்படுத்தல், ஒப்புரவு, மற்றும், நம்பிக்கையின் பயணமாக அமையும் - ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

வருகிற ஜூலை மாதம் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடா நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணம் குறித்த விவரங்களை, திருப்பீட செய்தித் தொடர்பகம், ஜூன் 23, இவ்வியாழனன்று வெளியிட்டுள்ளது.

ஜூலை 24 ஞாயிறு காலையில் உரோம் பியுமிச்சினோ பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே நாளில் கனடாவின் Edmonton பன்னாட்டு விமானநிலையத்தைச் சென்றடைவார். அங்கு அவர் அதிகாரப்பூர்வ வரவேற்பையும் பெறுவார்.

ஜூலை 25, திங்களன்று Edmonton நகருக்கு வடக்கே ஏறத்தாழ எழுபது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற Maskwacis நகரத்தில், முதல் நாடுகள், Métis, Inuit ஆகிய பூர்வீக இனங்களின் மக்களைச் சந்திப்பதோடு திருத்தந்தை, தன் முதல் பொது பயண நிகழ்வுகளைத் தொடங்குவார்.

இச்சந்திப்பை முடித்து Edmonton நகரத்திற்குத் திரும்பும் திருத்தந்தை, அன்று மாலையில் அந்நகரத்தின் திருஇதய பங்குத்தளத்தின் உறுப்பினர்கள் மற்றும், பூர்வீக இன மக்களைச் சந்திப்பார். ஜூலை 26, செவ்வாயன்று Edmonton நகரத்தின் காமன்வெல்த் அரங்கத்தில் திருப்பலி நிறைவேற்றியபின்னர், Lac Ste. Anne நகரத்தின் புறநகர்ப் பகுதியில் நடைபெறும் திருப்பயணம் மற்றும், இறைவார்த்தை வழிபாட்டில் கலந்துகொள்வார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேற்கிலிருந்து கிழக்கே...

கனடாவின் மேற்குப் பகுதியில் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, ஜூலை 27, புதனன்று அந்நாட்டின் கிழக்கே அமைந்துள்ள Quebec நகரத்திற்குச் செல்லும் திருத்தந்தை, கனடாவின் தலைமை ஆளுனர், பிரதமர் ஆகியோரைச் சந்தித்து உரையாடுவார். அதற்குப்பின்னர், அந்நாட்டின் அரசு அதிகாரிகள், பூர்வீக இன மக்களின் பிரதிநிதிகள், தூதரகங்களின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து உரை நிகழ்த்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.  ஜூலை 28, வியாழன் காலையில் புனித Anne de Beaupré தேசிய திருத்தலத்தில் திருப்பலி நிறைவற்றும் திருத்தந்தை, மாலையில் Notre Dame பேராலயத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், குருத்துவ மாணவர்கள் மற்றும், மேய்ப்புப்பணியாளர்களோடு மாலை வழிபாட்டை தலைமையேற்று நிறைவேற்றுவார்.

விடுதிப் பள்ளியில் சந்திப்பு

ஜூலை 29 வெள்ளிக்கிழமையன்று, Quebec நகரின் பேராயர் இல்லத்தில் இயேசு சபை குழுமத்தின் உறுப்பினர்களோடு உரையாடிய பின்னர், பூர்வீக இன மக்களின் பிரதிநிதிகளையும் திருத்தந்தை சந்திப்பார்.

இந்நிகழ்வுக்குப் பின்னர் Iqaluit நகருக்குச் செல்லும் திருத்தந்தை, அந்நகரிலுள்ள ஆரம்பப் பள்ளியின் முன்னாள் விடுதி மாணவர்களைச் சந்தித்து உரையாடுவார். பின்னர் அதே பள்ளியில், இளையோர் மற்றும், வயதுமுதிர்ந்தோரைச் சந்தித்து உரை நிகழ்த்துவதோடு கனடா நாட்டுத் திருத்தூதுப் பயணத் திட்டத்தை நிறைவு செய்வார் திருத்தந்தை பிரான்சிஸ். அன்று மாலையில் புறப்பட்டு, ஜூலை 29 சனிக்கிழமையன்று உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 June 2022, 16:42