உக்ரைன் போரின் அழிவுகள் உக்ரைன் போரின் அழிவுகள்  

உக்ரைனில் போர் நிறுத்தப்பட கடவுள்தான் வழிகாட்டவேண்டும்

மாரியுப்போல் நகரை ஆக்ரமித்துள்ள இரஷ்யப் படைகள், அந்நகர்மீது குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியபோது, அது அம்மக்களின் மாண்பை அவமதிப்பதாய் இருந்தது – உக்ரைன் அருள்பணி Spryniuk

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஜூலை 10, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின்னர், தொடர்ந்து போர் இடம்பெற்றுவரும் உக்ரைன் நாட்டிலும் அமைதி நிலவவேண்டும் என்று, மீண்டும் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உக்ரைன் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் அறிவற்றதனமான போரை முடிவுக்குக் கொணர்வதற்கு, கடவுள் வழியைக் காட்டவேண்டும் என உருக்கமாக மன்றாடுவோம் என்றுரைத்த திருத்தந்தை, ஒவ்வொரு நாளும் அந்நாட்டில் இடம்பெற்றுவரும் கொடூரமான தாக்குதல்களால் சிதைந்துபோயுள்ள பொதுமக்களோடு தன் அருகாமையையும் தெரிவித்துள்ளார்.  

இப்போரில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுக்காக, குறிப்பாக, காயமுற்றோர், நோயாளிகள், முதியோர், சிறார் போன்றோருக்காக, தான் சிறப்பாகச் செபிப்பதாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் காரித்தாஸ்

மேலும், உக்ரைனின் தென்கிழக்கேயுள்ள மாரியுப்போல் துறைமுக நகரம் நோக்கி இரஷ்யப் படைகள் வர ஆரப்பித்தவுடனேயே அந்நகரைவிட்டு வெளியேறிய மக்களோடு உடனிருந்து பணியாற்றிய அந்நகரின் காரித்தாஸ் கிளை, புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு, Zaporizhia நகரிலிருந்து தொடர்ந்து உதவிகளை ஆற்றி வருகிறது என்று, அருள்பணி Rostyslav Spryniuk அவர்கள் கூறியுள்ளார்.

மாரியுப்போல் நகரை ஆக்ரமித்துள்ள இரஷ்யப் படைகள், அந்நகர்மீது குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியபோது, அது அம்மக்களின் மாண்பை அவமதிப்பதாய் இருந்தது  என வத்திக்கான் செய்திகளிடம் கூறிய அருள்பணி Spryniuk அவர்கள், காரித்தாஸ் அமைப்பு, அம்மக்களுக்குத் தேவையான உடல் மற்றும், உளவியல் ரீதியான உதவிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 July 2022, 13:00