மருத்துவர், செவிலியர், ஆதரவற்றோரின் வானதூதர்கள்

தங்களின் வாழ்வைப் பணயம் வைத்து, பெருந்தொற்று நோயாளிகளுக்குப் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும், செவிலியர்களுக்கு நம் பாராட்டைத் தெரிவிப்போம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

உலக அளவில் இடம்பெறும் நலவாழ்வு நெருக்கடியை எதிர்கொள்வது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள போதனைகளை மீண்டும் பரிந்துரைக்கும்வண்ணம், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையும், வத்திக்கானின் கோவிட்-19 பணிக்குழுவும் இணைந்து காணொளிகளை வெளியிட்டு வருகின்றன.

ஒருவர், தான் எதிர்கொள்ளும் நெருக்கடியிலிருந்து தானாகவே வெளிவர இயலாது, மாறாக, அதற்கு மற்றவரின் உதவிக்கரம் எப்போதும் தேவைப்படுகிறது என்று திருத்தந்தை வலியுறுத்தி வருவது, இக்காணொளியில் மீண்டும் கூறப்பட்டுள்ளது.

“பெருந்தொற்று மற்றும், பிரான்சிசின் அதிகாரப்பூர்வ போதனைகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அக்காணொளியில், ஆதரவற்று இருப்போருக்கு அருகிலிருந்து பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் வானதூதர்கள் என்று திருத்தந்தை கூறுவது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தங்களின் வாழ்வைப் பணயம்வைத்து, பெருந்தொற்று நோயாளிகளுக்குப் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நம் பாராட்டைத் தெரிவிப்போம், இவர்கள் நம்பிக்கை, மற்றும் ஊக்கம் ஆகியவற்றின் அடையாளமாய் இருக்கின்றனர், இவர்களில் பலர் தங்கள் வாழ்வை இழந்திருக்கின்றனர் என்று திருத்தந்தை கூறுவது அக்காணொளியில் இடம்பெற்றுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 July 2022, 14:26