திருத்தந்தை பிரான்சிஸ், பேரருட்திரு Fernando Ocáriz திருத்தந்தை பிரான்சிஸ், பேரருட்திரு Fernando Ocáriz 

Opus Deiன், நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவித்தல்

Opus Dei அமைப்பினர் நற்செய்தி அறிவிப்புப்பணியை முன்னெடுத்துச் செல்லும்வண்ணம், தனிவரத்தைப் பாதுகாக்க புனித ஹோசே மரியா உதவிசெய்கிறார் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

Opus Dei என்ற உலகளாவிய கத்தோலிக்க பக்த அமைப்பின் தனிவரத்தைப் பாதுகாத்தல் மற்றும் அதன் நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக்கொண்டு, Praedicate Evangelium புதிய திருத்தூது கொள்கை விளக்கத்தின் அடிப்படையில், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் (1982, நவம்பர் 28) திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் வெளியிட்ட Ut sit என்ற திருத்தூது கொள்கை விளக்கத்தில் சில மாற்றங்களைக் கொணர்ந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 22, இவ்வெள்ளியன்று, “Ad charisma tuendum” அதாவது "தனிவரத்தைப் பாதுகாப்பதற்கு" என்ற தலைப்பில், தன் சுய விருப்பத்தால் வெளியிடும் Motu Proprio அறிக்கை வழியாக திருத்தந்தை வெளியிட்டுள்ள இம்மாற்றங்கள், வருகிற ஆகஸ்ட் 4ம் தேதி நடைமுறைக்கு வரும்..

Opus Dei அமைப்பின் புதிய தலைவர் ஆயருக்குரிய அதிகாரமின்றி, ஒரு வழிகாட்டியாக, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தந்தையாக இருக்கவேண்டும் என்றும், இந்த அமைப்பு ஆயர்கள் பேராயத்தின்கீழ் இல்லாமல், அருள்பணியாளர்கள் பேராயத்தின்கீழ் இருப்பார் என்றும், ஒவ்வோர் ஆண்டும் அவ்வமைப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக இருப்பவர், அவர் வாழ்கின்ற மறைமாவட்டத்தின் ஆயரின்கீழ் இல்லாமல், அந்த அமைப்பைச் சார்ந்த ஆயரின்கீழ் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அமைப்பை உருவாக்கிய புனித ஹோசே மரியா அவர்களை, கடவுள் ஒரு கொடையாகக் கொடுத்திருக்கிறார், Opus Dei அமைப்பின் உறுப்பினர்கள் நற்செய்தி அறிவிப்புப்பணியை முன்னெடுத்துச் செல்லும்வண்ணம், தனிவரத்தைப் பாதுகாக்க இப்புனிதர் உதவிசெய்கிறார் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இந்த அமைப்பினர், தங்களுக்கிடையே குடும்பப் பாசம், மற்றும், நம்பிக்கையை வளர்ப்பதற்கு, அதன் புதிய தலைவர் ஒரு தந்தைபோன்று, வழிகாட்டியாக இருப்பார் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த அமைப்பில் பெரும்பான்மையினர் பொதுநிலையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2022, 14:28