கியூபெக் நகரில் திருத்தந்தை கியூபெக் நகரில் திருத்தந்தை  

திருத்தந்தையின் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம்

கடவுளுக்கும், மனிதருக்கும், இயற்கைக்கும் மிகுந்த கவனத்தோடு செவிமடுக்கும் திறமையைக் கொண்டிருக்கும் பூர்வீக இனங்களின் மக்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

கனடாவின் பூர்வீக இனங்களின் மக்களுக்கு எதிராக, பல கிறிஸ்தவர்களால் இழைக்கப்பட்ட தவறுகளுக்கு, கனடா ஆயர்களோடு சேர்ந்து, நானும் மன்னிப்புக்காக மீண்டும் விண்ணப்பிக்கின்றேன். நற்செய்தியின் போதனைகளைவிட, உலகின் வழக்குகளுக்கு ஏற்ப சில நம்பிக்கையாளர்கள், தங்களையே அமைத்துக்கொள்வது பெருந்துயரம் தருகிறது.

கடவுளுக்கும், மனிதருக்கும், இயற்கைக்கும் மிகுந்த கவனத்தோடு செவிமடுக்கும் திறமையைக் கொண்டிருக்கும் பூர்வீக இனங்களின் மக்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. குறிப்பாக, உண்மையிலேயே மனிதம்நிறைந்த, நிலையான மற்றும், ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டிருப்பதை கடினப்படுத்தும் இன்றைய உலகின் செயல்பாடுகளுக்கு மத்தியில், இவை நமக்குத் தேவைப்படுகின்றன. ஆயுதப் போட்டியும், அச்சத்தை ஊட்டும் யுக்திகளும், அமைதி மற்றும், பாதுகாப்பைக் கொணராது. போர்களை எவ்வாறு தொடங்குவது எனக் கேட்பதைவிடுத்து, அவற்றை நிறுத்தும் முறைகள் குறித்து கேட்கவேண்டும். பகைமைக்குரிய கூறுகளைப் பின்னுக்குத்தள்ளி, படைப்பாற்றல் மற்றும், தொலைநோக்குப் பார்வைகொண்ட கொள்கைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.

புறக்கணிப்புக் கலாச்சாரத்திற்கு இட்டுச்செல்லும் பல கருத்தியல் காலனி முறைகள் இக்காலத்திலும்கூட நிலவுகின்றன. அவை, ஏழைகள், புலம்பெயர்ந்தோர், வயதுமுதிர்ந்தோர், நோயாளிகள், கருவிலே வளரும் குழந்தைகள்.. போன்ற மிகவும் பலவீனமான மற்றும், வலுவற்றவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளைப் புறக்கணிக்கின்றன. இவர்களே, பணக்கார சமுதாயங்களில் மறக்கப்பட்டவர்கள்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  ஜூலை 24, இஞ்ஞாயிறு முதல் கனடா நாட்டில் மேற்கொண்டுவரும் தவத் திருப்பயணத்தில், ஜூலை 28 இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு குறுஞ்செய்திகளை பதிவுசெய்துள்ளார். இவ்வியாழனன்று, திருத்தந்தை கனடா நாட்டில் தனது முதல் பயணத் திட்டமாக, புனித அன்னா திருத்தலத்தில் திருப்பலியை நிறைவேற்றத் தொடங்கியபோது இந்திய இலங்கை நேரம் இவ்வியாழன் இரவு 7.30 மணியாக இருக்கும். கனடாவின் ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்கள், திருத்தொண்டர்கள், மேய்ப்புப்பணியாளர்கள் ஆகியோரை சந்திப்பதும் இவ்வியாழன் பயணத் திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2022, 14:17