நீங்கள் கட்டும் கட்டடங்கள் பொது நலனுக்குப் பணியாற்றுவதாக!
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகப் பொருள்களால் எழுப்பப்படும் கட்டடங்கள், மற்றவரின் நலனுக்காகப் பயன்படுத்தப்படவேண்டும் என்று, இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைக்கென அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூலை 12, இச்செவ்வாயன்று, கொலம்பியா நாட்டின் தலைநகர் பொகோட்டாவில் CELAM எனப்படும் இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைக்கென அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் திறப்பு விழா மற்றும், அப்பகுதியின் ஆயர்கள் தொடங்கியுள்ள ஆண்டு நிறையமர்வு கூட்டத்திற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நிகழ்வில் தன்னையும் ஈடுபடுத்தி ஆயர்கள் எழுதியுள்ள மடலுக்கு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்வதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இக்கட்டடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதற்கு நாம் அனைவரும் கடவுளுக்கு நன்றி கூறுவோம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆயர்கள் பேரவையின் நற்செய்தி அறிவிப்புப்பணித் திட்டங்கள், மற்றும், மேய்ப்புப்பணி சார்ந்த பயிற்சிகளை நடத்த இக்கட்டடம் உதவியாக இருக்கும் எனவும், இந்நேரத்தில், ஆண்டவரே வீட்டைக் கட்டினாலொழிய அதைக் கட்டுபவரின் உழைப்பெல்லாம் வீண் என்ற வார்த்தைகளை மனதில் கொண்டிருப்பது பொருத்தமானது எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
நாம் கிறிஸ்துவையே மூலைக்கல்லாகக் கொண்டு, திருத்தூதர்கள், மற்றும், இறைவாக்கினர்களின் அடித்தளத்தின் மீது கட்டப்பட்ட சீடர்களின் குழுமமாக, தூய ஆவியாரின் வல்லமையோடு, திருஅவையின் மறைப்பணிக்குத் தூண்டுதல் அளிக்கவும், அதனை வலுப்படுத்தவும், உயிர்த்த ஆண்டவரிடம் நாம் தொடர்ந்து மன்றாடவேண்டும் என்பதை உணர்கிறோம் என்றும், திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.
இதன் வழியாக காலத்தின் அறிகுறிகளைத் தெளிந்துதேர்ந்து, இறைமக்களின் தேவைகளுக்கு, நம்பிக்கை எதிர்நோக்கு, மற்றும், பிறரன்பு ஆகிய கூறுகளோடு பதிலளிக்க நாம் தயாராக இருப்போம் எனவும், இலத்தீன் அமெரிக்க ஆயர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்