எட்மன்டன் இயேசுவின் திருஇருதய பங்கு ஆலயம்

எட்மன்டன் நகரில் ஒவ்வோர் ஆண்டும் பல விழாக்கள் நடைபெறுவதால், இது "கனடாவின் விழா நகரம்" என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடாவில், தவத் திருப்பயணமாக, எட்மன்டன் பன்னாட்டு விமான நிலையத்தில் சென்றிறங்கிய அதேநேரத்தில், எட்மன்டன் இயேசுவின் திருஇதய பங்கு ஆலயத்தில், அமலமரி தியாகிகள் சபையின் பங்குத்தந்தை, அருள்பணி சூசை ஜேசு அவர்கள், First Nations பூர்வீக இனத்தவருக்கு ஞாயிறு திருப்பலியை பண்பாட்டுமயமாக்கல் முறையில் நிறைவேற்றிக்கொண்டிருந்தார். பூர்வீக இனத்தவர், மத்தளங்களின் முழக்கத்தோடு அவரைப் பவனியாக அழைத்துச் சென்றது முதல், அத்திருப்பலி அவ்வினத்தவரின் மரபில் நிறைவேற்றப்பட்டது. தூய்மைப்படுத்தலின் அடையாளமாக மருத்துவத் தாவரங்கள் எரிக்கப்பட்டன. மேலும் அம்மக்களின் Cree மொழியைத் தெளிவாகப் பேசுகின்ற இந்தியரான அருள்பணி சூசை ஜேசு அவர்கள், திருப்பலியின் ஒரு பகுதியை Cree மொழியில் நிறைவேற்றினார். இவர் ஆற்றிய மறையுரையில், வரவேற்றல், மற்றும், ஒருங்கிணைப்பு ஆகியவை இம்மக்களின் விழுமியங்கள் என்பதை எடுத்துரைத்தார். இந்த ஆலயத்திற்கு ஜூலை 25, இத்திங்கள் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு, அதாவது இந்திய இலங்கை நேரம் ஜூலை 26, இச்செவ்வாய் அதிகாலை நான்கு மணிக்குச் சென்று இம்மக்களை திருத்தந்தை சந்திக்கிறார். அச்சமயத்தில் அருள்பணி சூசை ஜேசு அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றுகிறார்.  எட்மன்டன் நகரின் இயேசுவின் திருஇதய பங்கு ஆலயத்தில், அருள்பணி சூசை ஜேசு அவர்கள் நிறைவேற்றிய திருப்பலி மற்றும், அவரது மறையுரையை கவனமாகக் கேட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வருகைக்காக காத்திருக்கும் எட்மன்டன் நகரின் Papachase First Nation பூர்வீக இனத்தவரில் மூத்தவரான Fernie Marty அவர்கள், இந்நிகழ்வில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசுவார். இது குறித்து Fernie Marty அவர்கள் வத்திக்கான் வானொலி நிருபர்களிடம் தனது காத்திருப்பு குறித்த கருத்தைப் பதிவுசெய்துள்ளார். திருத்தந்தை இவ்வாலயத்திற்கு வருகை தருவது மிக முக்கியமானது. கடந்தகாலத்தில் பூர்வீக இனத்தவருக்கு எதிராக இடம்பெற்ற கொடூரங்களில் ஏற்பட்ட மனக்காயங்களை அவர் குணமாக்க வருகிறார். இரு காலக்கட்டங்களில், இரு கலாச்சாரங்களில் நான் வாழ்வதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். நான் பிறந்தவுடனேயே திருமுழுக்குப் பெறவேண்டும் என்பதில் என் தாய் உறுதியாய் இருந்தார். திருத்தந்தை இங்கு வருவது, என்னைப் போன்ற பலரில் குணப்படுத்தல் நடவடிக்கை தொடங்கப்படுவதற்கு காரணமாக அமையும். இவ்வாறு Marty அவர்கள் கூறியுள்ளார்.

பூர்வீக இனத்தவரை முத்தம் செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ்
பூர்வீக இனத்தவரை முத்தம் செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ்

"கனடாவின் விழா நகரம்"

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கனடாவில் தனது பயண நிகழ்வுகளைத் தொடங்கியுள்ள எட்மன்டன் நகரம், அந்நாட்டின் Alberta மாநிலத்தின் தலைநகரமாகும். இந்நகரம், Saskatchewan ஆற்றுக்கு வடக்கே அமைந்துள்ளது. 2021ம் ஆண்டின் தரவுகளின்படி,  இந்நகரத்தில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வட அமெரிக்காவின் வடகோடியில் உள்ள எட்மன்டன் நகரம், கனடாவின் ஐந்தாவது பெரிய நகரமாக கணிக்கப்பட்டுள்ளது. இந்நகர்ப் பகுதி எண்ணெய் வளம் மிக்கதாயும், வைரச் சுரங்கங்கள் உள்ளதாயும் கருதப்படுகிறது. கலாச்சார, அரசு மற்றும், கல்வியின் மையமாகவும் இந்நகரம் விளங்குகின்றது. இந்நகரில் ஒவ்வோர் ஆண்டும் பல விழாக்கள் நடைபெறுவதால், இது "கனடாவின் விழா நகரம்" என்ற புனைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்நகரில் அமைந்திருக்கின்ற வணிகத்திடல் (West Edmonton Mall), 1981ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டுவரை, உலகின் மிகப் பெரிய பேரங்காடியாக விளங்கியது. தற்போது அது வட அமெரிக்காவின் இரண்டாவது பெரிய பேரங்காடியாக உள்ளது. இந்நகரின் Fort Edmonton பூங்கா, கனடாவின் மிகப் பெரிய வரலாற்று அருங்காட்சியகமாகும்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2022, 15:20