கனடாவுக்குச் சென்ற விமானப் பயணத்தில் செய்தியாளர்களிடம் திருத்தந்தை பேசுகிறார் கனடாவுக்குச் சென்ற விமானப் பயணத்தில் செய்தியாளர்களிடம் திருத்தந்தை பேசுகிறார் 

வயதான துறவியர், அர்ப்பண வாழ்வின் தாத்தாக்கள் பாட்டிகள்

முதியோர் மரங்கள் என்றால், இளையோர் அம்மரங்களின் மலர்கள் மற்றும் கனிகளாகும் – திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஜூலை 24, இஞ்ஞாயிறு காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரிலிருந்து கனடா நாட்டிற்கு தனது 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத்  தொடங்கியபோது, அப்பயணத்தில் தன்னோடு பயணம் மேற்கொண்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் ஏறத்தாழ எண்பது பன்னாட்டு செய்தியாளர்களுக்கு முதலில் வணக்கம் சொல்லி இஞ்ஞாயிறின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். "முதிர்வயதிலும் அவர்கள் பலனளிப்பர்" என்ற திருப்பாடல் 92ன் திருவசனத்தை மையப்படுத்தி, இஞ்ஞாயிறன்று, தாத்தாக்கள் பாட்டிகள், மற்றும், முதியோர் இரண்டாவது உலக நாள் சிறப்பிக்கப்பட்டதை முதலில் திருத்தந்தை நினைவுபடுத்தினார்.  

தாத்தாக்கள் பாட்டிகள் வேர்கள் போன்றவர்கள். அவர்கள் சமுதாயத்தின் கருவூலங்களாக, அனைத்தையும் முன்னோக்கி நடத்திச் செல்கின்றனர். இவர்கள், வரலாறு, மரபுகள், பழக்கவழக்கங்கள், மற்றும் ஏனைய விழுமியங்களை அடுத்த தலைமுறைகளுக்கு வழங்குபவர்கள். இவர்களோடு இளையோர் தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பழக்கத்தை ஒரு மரத்திற்கு ஒப்பிட்ட திருத்தந்தை, மரமானது தன் வேர்களிலிருந்து சக்தியைப் பெற்று, அதனை மலர்கள் மற்றும் கனிகளாக வழங்குகின்றது. அதேபோல் முதியோர் மரங்கள் என்றால், இளையோர் அம்மரங்களின் மலர்கள் மற்றும் கனிகளாகும், மேலும், வயதுமுதிர்ந்த இருபால் துறவியர், அர்ப்பண வாழ்வின் தாத்தாக்கள் பாட்டிகள். அவர்களை மறைத்துவைக்க வேண்டாம். அவர்கள், ஒரு துறவறக் குடும்பத்தின் ஞானம், எனவே இளம் துறவியரும், நவ துறவியரும் அவர்களோடு தொடர்பு வைத்துக்கொள்ளவேண்டும். அவர்கள் வழங்கும் வாழ்வு அனுபவம், துறவு வாழ்வை முன்னோக்கி நடத்திச் செல்ல உதவுகின்றது. நம் ஒவ்வொருவருக்கும் தாத்தாக்கள் பாட்டிகள் இருக்கின்றனர், அவர்களில் சிலர் இறைபதம் சேர்ந்துவிட்டனர், சிலர் உயிரோடு இருக்கின்றனர், இன்றைய நாளில் அவர்களை சிறப்பாக நினைவுகூர்வோம், நாம் முன்னோக்கிச் செல்வதற்கு இவர்கள் உதவுகின்றனர். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடாவுக்குச் சென்ற விமானப் பயணத்தில் கூறியுள்ளார். இயேசுவின் தாத்தா பாட்டியான புனிதர்கள் அன்னா சுவக்கீன் விழாவுக்கு ஜூலை 26 முந்திய ஞாயிறன்று, அதாவது ஜூலை மாதம் நான்காவது ஞாயிறன்று தாத்தாக்கள் பாட்டிகள் உலக நாள் சிறப்பிக்கப்படுகிறது. இந்த உலக நாளை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2021ம் ஆண்டு உருவாக்கினார். மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விமானப் பயணத்தில் செய்தியாளர்களை வாழ்த்தியபோது, இரு பக்கங்களிலும் இருக்கைகளுக்கு இடையிலுள்ள பகுதியில் நடந்துகொண்டேதான் பேசினார் என்று திருப்பீட செய்தித் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் கூறியுள்ளார். மூட்டுவலி காரணமாக கடந்த பல நாள்களாக சக்கர நாற்காலியில் இருந்துகொண்டு மக்களைச் சந்தித்து வந்த திருத்தந்தை, அந்த வலிக்கு தொடர்ந்து சிகிச்சையும் எடுத்துவந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 July 2022, 15:35