கிறிஸ்துவின் உடலாகிய திருஅவை, ஒப்புரவின் அடையாளம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எட்மன்டனிலுள்ள புனித இருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் பூர்விக இன மக்களுக்கும் அப்பங்கிலுள்ள உறுப்பினர்களுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை.
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, இந்நேரத்தில் ஒப்புரவு குறித்த என் எண்ணங்களை உங்களோடுப் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். ஒப்புரவு குறித்து இயேசு என்ன சொல்கிறார் என்றும், ஒப்புரவு என்ற வார்த்தை என்ன அர்த்தத்தைத் தன்னுள் கொண்டுள்ளது என்பது குறித்தும் ஆழ்ந்து சிந்திப்போம்.
கிறிஸ்து கொண்டு வந்த ஒப்புரவு என்பது, வெளிப்புற அமைதியைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தம் அல்ல, மாறாக, அனைவருக்கும் மகிழ்வை அளிக்கக் கூடிய ஒருவகையான மனிதர்களின் ஒப்பந்தம் இது. அதாவது, தொடக்க கால கிறிஸ்தவர்கள் அழைத்ததுபோல, ‘வாழ்க்கை மரத்தில்’ அதாவது, சிலுவையில் இயேசு நம்மை ஒருவரோடு ஒருவர் ஒப்புரவாக்குகின்றார் என்பதை உணர்வது.
சிலுவை என்னும் மரம்
ஒரு மரம், மண்ணில் வேர் பரப்பி, அதன் இலைகள் வழியாக ஆக்ஸிஜனைக் கொடுத்து, அதன் பழங்களால் நம்மை வளர்க்கிறது. அவ்வாறே, திருஅவையின் குறியீடாக அமைந்துள்ள சிலுவை என்னும் இம்மரமானது விண்ணையும் மண்ணையும், அதாவது, விண்ணகக் கடவுளையும் மண்ணக மாந்தரையும் இணைக்கும் ஓர் இணைப்புப் பாலமாக அமைந்துள்ளது. இந்தச் சிலுவையில், கிறிஸ்து அனைத்தையும் ஒப்புரவாக்கி, நினைத்துப் பார்க்க முடியாத மற்றும் மன்னிக்க முடியாததாகத் தோன்றிய அனைத்தையும், மற்றும், அனைவரையும் மீண்டும் அரவணைத்து ஒன்றிணைக்கின்றார்.
அன்பானச் சகோதரர் சகோதரிகளே, ஆற்ற முடியாத காயங்களைத் தங்களின் இதயங்களில் சுமந்துகொண்டிருப்பவர்களுக்கு இந்த ஒப்புரவு என்ற வார்த்தை என்னமாதிரியான அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது என்பது குறித்தும் சிந்திப்போம்.
கடந்த காலத்தில் நாம் சகித்துக்கொண்ட தவறுகளோடும், காயப்பட்ட நினைவுகளோடும், எந்த மனித ஆறுதலாலும் குணப்படுத்த முடியாத அதிர்ச்சிகரமான அனுபவங்களோடும் ஒப்புரவாகிட வேண்டுமானால், முதலில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை நோக்கி நம் கண்களைத் திருப்ப வேண்டும். அவரது சிலுவை பீடத்தில் நாம் அமைதி அடைய வேண்டும். ஏனென்றால், சிலுவை மரத்தில்தான் துயரம் அன்பாகவும், இறப்பு வாழ்க்கையாகவும், ஏமாற்றம் நம்பிக்கையாகவும், கைவிடப்படல் நட்புறவாகவும், இடைவெளி ஒன்றிப்பாகவும் மாறுகிறது.
ஒப்புரவின் அடையாளமான திருஅவை
இரண்டாவதாக, திருஅவை என்பது ஒப்புரவின் உயிருள்ள உடலாக அமைந்துள்ளது என்பதையும் உங்களுக்கு நான் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். நாம் சந்திக்கும், சிலுவையில் அறையப்பட்ட ஒவ்வொருவரும், சகோதரர் சகோதரிகளாக அன்பு செய்யப்படவேண்டும் என்பதை உணர்வோம். இயேசுவின் தூய உடல் அன்பு செய்யப்படவேண்டும். கிறிஸ்துவின் உடலாகிய திருஅவை, ஒப்புரவின் அடையாளமாக அமையட்டும்.
உடனிருப்பின் கடவுள்
மூன்றாவதாக, ஒப்புரவு என்ற வார்த்தை நடைமுறையில் திருஅவையுடன் ஒன்றிணைந்து செல்கிறது. திருஅவை என்பது நாம் புதிதாக ஒப்புரவு செய்துகொள்ளும் ஓர் இல்லமாகவும், அங்கு நாம் மீண்டும் புதியதொரு வாழ்வைத் தொடங்கவும் அதில் ஒன்றிணைந்து வளரவும் நமக்கு வழிகாட்டுகிறது. தனிமனிதராகச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, நாம் ஒருவருக்கொருவர் சகோதரர் சகோதரிகள் என்பதை ஏற்றுக்கொள்ளும் இல்லமாக திருஅவை அமைந்துள்ளது.
திருஅவை என்பது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் ஒர் இல்லம், இங்குதான் நாம் அனைவரும், தூய ஆவியானவர் வாழும் இல்லங்களாக ஒருவரையொருவர் சந்தித்து, ஒருவருக்கொருவர் பணியாற்றி ஒருவரோடு ஒருவர் ஒப்புரவாகின்றோம்.
ஒன்றாக இறைவேண்டல் செய்வது, ஒருவருக்கொருவர் உதவுவது, வாழ்க்கை அனுபவங்கள், பொதுவான மகிழ்ச்சிகள் மற்றும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்வது ஆகிய இவைகளே கடவுளின் ஒப்புரவுப் பணிக்கான கதவைத் திறக்கிறது. நமது கடவுள் உடனிருப்பின் கடவுள், அவர் இயேசுவின் வழியாக ஒப்புரவு, இரக்கம் மற்றும் கனிவான அன்பின் மொழியை நமக்குக் கற்பிக்கின்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்