திருத்தந்தை: வயதுமுதிர்ந்தோருக்காக இறைவேண்டல் செய்வோம்

போரால் நிறைந்துள்ள உலகத்திற்கு, கனிவன்பின் ஓர் உண்மையான புரட்சி தேவைப்படுகின்றது, முதியோர், சமுதாயத்தின் துன்பம்நிறை விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு உதவமுடியும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

வயதுமுதிர்ந்தோர் கனிவன்பின் ஆசிரியர்களாக இருக்கும்வண்ணம் அவர்களுக்காகச் செபிப்போம் என்று, ஜூன் 30 இவ்வியாழன் மாலையில் வெளியிடப்பட்டுள்ள, தன் ஜூலை மாதச் செபக்கருத்து வழியாக கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இச்செபக்கருத்து குறித்த தன் சிந்தனைகளை ஒரு காணொளியில் விளக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு ஜூலை 24ம் தேதி, தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும் முதியோர் இரண்டாவது உலக நாளைக் கொண்டாடுவதற்கு, திருஅவை தன்னை தயாரித்துவரும்வேளை, இந்த ஜூலை மாதம் முழுவதும் முதியோருக்காகச் செபிக்குமாறு, கத்தோலிக்கர் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ளார்,.

ஜூன் மாதச் செபக்கருத்தை குடும்பங்களுக்கு அர்ப்பணித்திருந்த திருத்தந்தை, நம் மத்தியில் இருக்கின்ற முதியோரின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்காமல், குடும்பங்கள் பற்றி நாம் பேச இயலாது என்றும், மனித வரலாற்றில் இப்போது இருக்கின்ற முதியோரின் எண்ணிக்கைபோன்று, இதுவரை இருந்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வின் இப்புதிய கட்டத்தில், வாழும்முறை குறித்து நமக்கு எதுவுமே தெரியாது எனவும், முதுமைக்கு உதவுவதற்கு பல திட்டங்கள் இருக்கின்றன, ஆனால் அவற்றில் சிலவே வாழ்வு சார்ந்தவை எனவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

கனிவன்பின் ஆசிரியர்கள்

வயதுமுதிர்ந்தோர், இளைய தலைமுறைகளுக்கு வழங்கவல்ல சிறப்புக் கொடைகள் மற்றும், அக்கறை குறித்த தன் சிந்தனைகளை எடுத்துரைத்துள்ள 85 வயதுநிரம்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வயதானவர்களாகிய நாம், பலநேரங்களில், அக்கறை, சிந்தனை, பாசம் ஆகிய சிறப்பு உணர்வுகளைக் கொண்டிருக்கிறோம், நாம் கனிவன்பின் ஆசிரியர்களாக இருக்கிறோம் அல்லது, அவ்வாறு இருப்பவர்களாக மாறவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் ஞானம்

போரால் நிறைந்துள்ள உலகத்திற்கு, கனிவன்பின் ஓர் உண்மையான புரட்சி தேவைப்படுகின்றது, முதியோர், துன்பங்களை எதிர்கொள்ளும் சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு உதவமுடியும் என்றும், தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும் முதியோர், நம் வாழ்வைப் பேணி வளர்க்கும் உணவு என்பதையும், அவர்கள், மக்களில் மறைந்திருக்கும் ஞானம் என்பதையும் நினைவில் வைத்திருப்போம் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார். 

இளையோர் தம் வருங்காலத்தை எதிர்நோக்குடனும், பொறுப்புடனும் முன்னோக்க, மக்கள் சமூகத்தின் வேர்கள் மற்றும், நினைவு ஆகியவற்றின் பிரதிநிதிகளான வயதுமுதிர்ந்தோரின் அனுபவமும் ஞானமும் உதவும்படியாக நாம் மன்றாடுவோம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜூலை மாதச் செபக்கருத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 July 2022, 09:54