பிரான்சின் தென்மேற்கு பகுதியில் பற்றி எரியும் காட்டில் நிற்கும் தீயணைப்பு வீரர் பிரான்சின் தென்மேற்கு பகுதியில் பற்றி எரியும் காட்டில் நிற்கும் தீயணைப்பு வீரர்  

வத்திக்கானில் காலநிலை மாறுபாடு குறித்த கருத்தரங்கம்

பல்லுயிர் இழப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் பல்வேறு போர்கள் தொடர்பான கவலைகளை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மக்களுக்கு உதவி புரியவும் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வத்திக்கானில் நடைபெறும் கருத்தரங்கத்திற்கு அனுப்பியுள்ள செய்தி ஒன்றில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"காலநிலை அழுத்தத்தின் கீழ் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பின்னடைவு" என்ற மையக்கருத்தில் ஜூலை 13, 14 ஆகிய தேதிகளில், திருப்பீட அறிவியல் கழகத்தால் நடத்தப்பெறும் இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் பங்குபெறும் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள தனது செய்தியில், இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதன் வழியாகச் சுற்றுச்சூழல் ஆபத்துகளைக் குறைத்தல், மற்றும், படிப்படியாக மோசமடைந்து வரும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப மக்களுக்கு உதவுதல், ஆகிய இரட்டை சவால்களை உலகம் எதிர்கொள்கிறது என்றும் தான் அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் எதிர்கொள்ளும் கடுமையான மற்றும் அதிகரித்து வரும் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வுகளைக் காண்பதற்கு, உள்ளூர், தேசிய மற்றும் பன்னாட்டளவில்  மத, அரசியல், சமூக மற்றும் கலாச்சார தலைவர்களுக்கிடையே துணிச்சலான, ஒத்துழைப்பு மற்றும் தொலைநோக்கு முயற்சிகள் தேவை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் வளம் குறைந்த பகுதிகளுக்கு நிதி உதவி வழங்கும் அதே வேளையில், உலகில் மிகவும் வளர்ந்த நாடுகள் தங்கள் சொந்த பகுதிகளில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய்மையான எரிசக்தி மற்றும் குடிநீர் ஆகியவை உலகத் தலைவர்கள் கவனிக்க வேண்டிய மற்ற முக்கிய பிரச்சினைகளாகும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உற்பத்தியை அதிகம் கொடுக்கக்கூடிய பயிர்களுக்கு மாற விவைசாயிகளுக்கு அதிக உதவிகள் தேவை என்பதையும் தனது செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஒன்றிணைந்து செயல்படுவதன் வழியாக, நல்மனம் கொண்ட ஆண்களும் பெண்களும் நம் முன் இருக்கும் பிரச்சினைகளின் அளவு மற்றும் சிக்கலான தன்மையைக் கையாள முடியும் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித குடும்பத்தையும் கடவுளின் உயிரிய கொடையான அவரின் படைப்பையும் காலநிலை மாற்றத்திலிருந்து பாதுகாப்பதோடு, நீதி மற்றும் அமைதிக்கான வழிகளை வளர்க்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2022, 14:11