எட்மன்டன் திருஇருதய பூர்வீக இனத்தவரின் ஆலயத்தில் திருத்தந்தை

திருத்தந்தையே, குணப்படுத்தல், ஒப்புரவு மற்றும், நம்பிக்கையின் திருப்பயணத்தில் நாங்களும் ஒன்றிணைய விரும்புகிறோம் - அருள்பணி சூசை ஜேசு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

ஜூலை 25, இத்திங்கள் உள்ளூர் நேரம் மாலை நான்கு முப்பது மணிக்கு, எட்மன்டன் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியிலிருந்து 4.4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இயேசுவின் திருஇருதய பூர்வீக இனத்தவரின் ஆலயத்திற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 1913ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம், கனடாவிலுள்ள மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். 1991ஆம் ஆண்டில் பேராயர் ஜோசப் மாக்நெயில் அவர்கள், இவ்வாலயத்தை, First Nations, Métis, மற்றும்,  Inuit ஆகிய இனங்களுக்குரிய தேசிய பங்குத்தள ஆலயமாக அறிவித்தார். இவ்வாலயத்தில் கத்தோலிக்க நம்பிக்கை, பூர்வீக இனத்தவரின் மரபில் அறிவிக்கப்படுகின்றது. இவ்விடத்தில் பூர்வீக இனத்தவரின் புனிதக் கலைகள் மற்றும், கைவினைப் பொருள்களைக் காணலாம். நாளடைவில், எட்மன்டன் நகரில் குடியேறிய புலம்பெயர்ந்தோர் இந்த ஆலயத்தில் தங்களின் ஆன்மீகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாலயப் பீடமும், திருப்பலி நிறைவேற்றும் அருள்பணியாளர் அமரும் நாற்காலியும் பூர்வீக இனக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் சேதமடைந்திருந்த இவ்வாலயத்தில் கடந்த ஈராண்டுகளாக புதுப்பித்தல் பணி நடைபெற்று, தற்போது புதுப்பொலிவுடன் விளங்குகிறது.  

இவ்வாலயத்திற்குச் சென்ற திருத்தந்தையை, பங்குத்தந்தை அருள்பணி சூசை ஜேசு அவர்கள் வரவேற்று அழைத்துச் சென்றபோது, ஆலயத்திற்குள் மக்கள் தம்பூராக்களை இசைத்துக்கொண்டிருந்தனர். முதலில் அருள்பணி சூசை ஜேசு அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த, அருள்பணி சூசை ஜேசு அவர்கள், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழராவார்.

 எட்மன்டன் திருஇருதய பூர்வீக இனத்தவரின் ஆலயம்
எட்மன்டன் திருஇருதய பூர்வீக இனத்தவரின் ஆலயம்

அருள்பணி சூசை ஜேசு அவர்களின் வரவேற்புரை

அன்புள்ள திருத்தந்தையே, ஓய்வின் காலமாகிய இக்கோடையில், தாங்கள் தியாகம் செய்து பூர்வீக இனத்தவரின் பூமியாகிய கனடாவுக்கு வருகை தந்துள்ளீர்கள். இப்பங்கு ஆலயம் பல ஆண்டுகளாக சந்திப்பு, உரையாடல், ஒப்புரவு மற்றும் சேவை ஆகியவற்றின் புனித இடமாக விளங்கி வருகிறது. இங்கு தங்களை வரவேற்பதில் மகிழ்கின்றோம். இங்கு வருகின்ற இறைமக்களுக்கென்று நடைபெறும் பல்வேறு பணிகளை ஆசிர்வதிக்குமாறு கேட்கிறோம். குணப்படுத்தல், ஒப்புரவு மற்றும், நம்பிக்கையின் திருப்பயணத்தில் நாங்களும் ஒன்றிணைய விரும்புகிறோம். இயேசு கொணரும் குணப்படுத்தல் பணியை தங்களோடு சேர்ந்து எல்லா இடங்களிலும் எடுத்துச்செல்லவும் விரும்புகிறோம். இன்று தங்களை நாங்கள் சந்திப்பது, நாம் அனைவரும் ஒரே குடும்பமாக, இறையாட்சியை நோக்கி கிறிஸ்துவோடு நடக்க புதிய சக்தியை எமக்குத் தருவதாக. திருஅவையின் தலைமை மேய்ப்பராகிய தங்களுக்காக நாங்கள் செபிக்கின்றோம். இவ்வாறு பங்குத்தந்தை அருள்பணி சூசை ஜேசு அவர்கள் திருத்தந்தையை வரவேற்றதற்குப் பின்னர் பங்கு மக்களில் இருவர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர். பூர்வீக இனத்தவரின் பாடலும் இடம்பெற்றது. இவற்றுக்குப்பின்னர், திருத்தந்தை தன் உரையைத் தொடங்கினார். இறுதியில் வட அமெரிக்காவின் முதல் பூர்வீக இனப் புனிதரான Kateri Tekakwithaவின் திருவுருவத்தை அர்ச்சித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இதுவே இத்திங்களன்று நடைபெற்ற இறுதிப் பயண நிகழ்வாகும். அன்று மாலை எட்மன்டன் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரிக்குச் சென்று இரவு உணவும் அருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அக்கல்லூரியை திருத்தந்தை சென்றடைந்தபோது, இந்திய இலங்கை நேரம் ஜூலை 26, இச்செவ்வாய் காலை 5.30 மணியாக இருந்தது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 July 2022, 15:07