திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

அனைத்துவிதமான வன்முறைகளும் புறக்கணிக்கப்படவேண்டும்

அமெரிக்க ஐக்கிய நாட்டில் சுதந்திர தின அணிவகுப்பில் நடத்தப்பட்டுள்ள அறிவற்ற துப்பாக்கிச்சூடு வன்முறை குறித்து திருத்தந்தை மிகுந்த கவலை கொண்டிருக்கிறார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிகாகோ நகரின் புறநகரிலுள்ள Highland பூங்காவில் சுதந்திர தின அணிவகுப்பு நடைபெற்றபோது இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு குறித்து தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளதோடு, அனைத்துவிதமான வன்முறைகளும் புறக்கணிக்கப்படவேண்டும், மற்றும், மனித வாழ்வின் எல்லா நிலைகளும் மதிக்கப்படவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜூலை 4, இத்திங்களன்று நடைபெற்ற அணிவகுப்பில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில்,  ஆறு பேர் இறந்துள்ளனர். மற்றும், முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள்,  இவ்வன்முறை குறித்த திருத்தந்தையின் எண்ணங்களை வெளியிட்டு திருத்தந்தையின் பெயரால் சிகாகோ பேராயர் கர்தினால் Blase Cupich அவர்களுக்குத் தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். 

அமெரிக்க ஐக்கிய நாட்டில் நடத்தப்பட்டுள்ள அறிவற்ற துப்பாக்கிச்சூடு வன்முறை குறித்து மிகுந்த கவலை கொண்டிருக்கும் திருத்தந்தை, இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆன்மீக முறையில் தனது அருகாமையையும் தெரிவிக்கிறார் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதில் இறந்தவர்களுக்கு நிறை அமைதியும், காயமடைந்தோர் மற்றும், துயருவோருக்கு ஆறுதலும் கிடைக்குமாறும், இத்தாக்குதலால் மிகுந்த துயரிலிருக்கும் சமுதாயம் முழுவதுடன் சேர்ந்து, எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

பாறையான இதயங்களைக்கூட மனமாற்றம் அடையச்செய்யவும், தீமையிலிருந்து விலகி, நன்மை செய்வதை இயலக்கூடியதாக ஆக்கவுமான கடவுளின் அருளில் முழு நம்பிக்கை வைப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, சமுதாயத்தின் ஒவ்வொரு நபரும் வன்முறையின் அனைத்து வடிவங்களையும் புறக்கணிக்கவும், வாழ்வின் அனைத்து நிலைகளையும் மதிக்கவும் வேண்டும் என்று இறைவேண்டல் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.  

அமெரிக்க ஐக்கிய நாடு உருவானதன் 246வது ஆண்டு விழா, அந்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, சிகாகோவில் உள்ள ஹைலேண்ட் பூங்காப் பகுதியில், சுதந்திர தின அணிவகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சி துவங்கிய 10 நிமிடத்தில், மர்மநபர் ஒருவர், அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கினார். இந்தச் சம்பவத்தில், 6 பேர் பலியாயினர், மற்றும்,30க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய நபரின் பெயர் Robert E. Crimo III (வயது 22) எனவும், அருகேயிருந்த கட்டடம் ஒன்றின் மேல் நின்றவாறு அவர் சுட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 July 2022, 13:55