கனடாவின் இலாரன்ஸ் ஆற்றங்கரையில் திருத்தந்தை  கனடாவின் இலாரன்ஸ் ஆற்றங்கரையில் திருத்தந்தை  

இலாரன்ஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ள கியூபெக் நகரம்

கனடாவின் 13 மாநிலங்கள், மற்றும், பிற பகுதிகளில் ஒன்றான கியூபெக் மாநிலம் பரப்பளவில் அந்நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகும்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 27 இப்புதனன்று பயண நிகழ்வுகளை நிறைவேற்றிய கியூபெக் நகரம், கனடாவின் கியூபெக் மாநிலத்தின் தலைநகரமாகும். இம்மாநிலம், கனடாவின் 13 மாநிலங்கள், மற்றும், பிற பகுதிகளில் ஒன்றாகும். பரப்பளவில்  மிகப்பெரிய மாநிலமாகவும், மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் உள்ளது. கனடாவில் மக்கள் தொகை அதிகமாக இருக்கின்ற Montreal மற்றும், கியூபெக் மாநிலத்தின் தலைநகரான கியூபெக் நகரத்திற்கும் இடையே பாய்கின்ற புனித இலாரன்ஸ் நதிக் கரைகளில் அமைந்துள்ள நகரப்புறங்களில் பெரும்பாலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1534ஆம் ஆண்டுக்கும், 1763ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், கியூபெக், கனடா என்றே அழைக்கப்பட்டது.

New Franceலுள்ள மிகவும் வளர்ச்சியடைந்த காலனியாகவும் இது விளங்கியது. பிரித்தானியருக்கும், பிரெஞ்சு நாட்டவருக்கும் இடையே ஏழாண்டுகளாக நடந்த போருக்குப்பின் கியூபெக் பிரித்தானிய காலனியாக மாறியது. அது முதலில் கியூபெக் மாநிலமாகவும் (1763–1791), பின்னர் கீழ் கனடாவாகவும் (1791–1841),  கீழ் கனடாவில் இடம்பெற்ற புரட்சி காரணமாக, கடைசியாக அது கிழக்கு கனடாவாகவும் (1841–1867) மாறியது. அது 1867ஆம் ஆண்டில் Ontario, Nova Scotia, மற்றும், New runswick ஆகியவற்றோடு இணைந்தது. கத்தோலிக்கத் திருஅவை, 1960களின் தொடக்கம்வரை, கியூபெக்கின் சமூக, மற்றும், கலாச்சார நிறுவனங்களில் மிகப்பெரிய பங்கு வகித்தது. எனினும், 1960கள் முதல் 1980கள் வரை நடைபெற்ற புரட்சியால், கியூபெக் மாநிலத்தில் அரசின் பங்கு அதிகரித்தது. கியூபெக் அரசு, வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்புச் சூழலில், அதாவது மக்களாட்சித்தன்மையோடும், முடியாட்சி அரசியலமைப்பைக் கொண்டாதாயும் செயல்படுகின்றது. தற்போதைய கியூபெக்கின் முதலமைச்சர் François Legault ஆவார். கியூபெக்கின் அதிகாரப்பூர்வ மொழி பிரெஞ்சு ஆகும். 

இருபதாயிரம் முதல் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆசியாவிலிருந்து அமெரிக்காவில்  புலம்பெயர்ந்த மக்களே, முதலில் கியூபெக் நிலப்பகுதியில் வாழத்தொடங்கியவர்கள். இவர்கள், ஏறத்தாழ 11 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்பு, இலாரன்ஸ் ஆற்றுப் படுகைப் பகுதிக்குச் சென்றனர். இவ்வாறு பல இனங்களின் கலாச்சாரங்கள் கியூபெக் பகுதியில் ஒன்றிணையத் தொடங்கின. 1500களில் ஐரோப்பியர்கள் கியூபெக் பகுதிக்குச் சென்றபோது 11 பூர்வீக இனக் குழுக்கள் வாழ்ந்து வந்தன என்று சொல்லப்படுகிறது. கியூபெக் மாநிலத்தின் தலைநகரமான கியூபெக் நகரம், 1608ம் ஆண்டில் பிரெஞ்சு நாடுகாண் பயணி Samuel de Champlain  அவர்களால் உருவாக்கப்பட்டது. 

ஆயினும், 16ம் நூற்றாண்டில் அங்குச் சென்ற பிரெஞ்சு நாடுகாண் பயணி Jacques Cartier அவர்கள், அப்பகுதிக்கு கியூபெக் என்ற பெயரைச் சூட்டினார். பூர்வீக இனத்தவர் மொழியில் கியூபெக் என்றால், ஆறு, குறுகலாகச் செல்லும் இடம் என்று பொருள். கனடாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டுவரும் தனது 37வது திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து ஜூலை 30ம் தேதி இத்தாலி நேரம் காலை 7.50 மணிக்கு உரோம் வந்து சேர்வார்.   

 

 

 

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2022, 14:35