கியூபெக் நகரில் மக்களை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை கியூபெக் நகரில் மக்களை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை  

கனடாவின் கிழக்குப் பகுதியில் திருப்பயண நிகழ்வுகள்

கனடாவின் பூர்வீக இனத்தவரின் உரிமைகள் ஊக்குவிக்கப்படவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஜூலை 27, இப்புதன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நான்காவது நாளாகும். திருத்தந்தை, இஞ்ஞாயிறு முதல் இச்செவ்வாய் வரை கனடாவின் எட்மன்டன் நகரிலிருந்து பல இடங்களுக்குச் சென்று பயணத் திட்டங்களை நிறைவேற்றினார். இப்புதன் உள்ளூர் நேரம் காலை 6.30 மணிக்கு, திருத்தந்தை, அந்நகரின் புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியில் தனியாகத் திருப்பலி நிறைவேற்றியபின் காலை உணவை முடித்து, இந்நாள்களில் அக்கல்லூரியில் தனக்கு உதவி செய்த எல்லாருக்கும் நன்றியும் தெரிவித்தார். அக்கல்லூரிக்கு புனித யோசேப்பு திருவுருவம் ஒன்றையும் பரிசாக அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அக்கல்லூரியிலிருந்து 31.3 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள எட்மன்டன் பன்னாட்டு விமான நிலையத்திற்கு காரில் சென்று கியூபெக் நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஏற்கனவேயுள்ள திட்டத்தின்படி, திருத்தந்தை ITA A330 இத்தாலிய விமானத்தில் எட்மன்டன் நகரிலிருந்து கியூபெக் நகருக்குச் செல்லவேண்டியிருந்தது. ஆனால் நிறைய சிறப்பு விருந்தினர்கள், மற்றும், இப்பயணத்திற்கு ஆதரவளிக்கும் குழு ஆகியோர் மற்றொரு விமானத்தில் காத்திருந்ததால், திருத்தந்தையும் அந்த விமானத்தில் ஏறவேண்டியிருந்தது. இதனால் விமானம், எட்மன்டன் நகரிலிருந்து கியூபெக் நகருக்கு ஏறத்தாழ ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. ஜூலை 27, இப்புதன் காலையில் எட்மன்டன் நகரிலிருந்து ஏறத்தாழ நான்கு மணி நேரம் விமானப் பயணம் மேற்கொண்டு, கனடாவின் கிழக்குப் பகுதியிலுள்ள கியூபெக் மாநிலத்தின் தலைநகரான கியூபெக் நகரின் பன்னாட்டு விமானத்தளம் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் அங்கிருந்து 15.8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கனடாவின் தலைமை ஆளுனர் மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2022, 14:33