கத்தோலிக்க-பெந்தக்கோஸ்து உரையாடல் பணிக்குழு கத்தோலிக்க-பெந்தக்கோஸ்து உரையாடல் பணிக்குழு  

திருத்தந்தை: நற்செய்தியின் மகிழ்வை புதிய ஆர்வத்தோடு அறிவியுங்கள்

கத்தோலிக்க-பெந்தக்கோஸ்து உரையாடல் பணிக்குழு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி, அக்குழுவின் உறுப்பினர்களுக்கு, செபம்நிறை நல்வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

கத்தோலிக்க-பெந்தக்கோஸ்து உரையாடல் பணிக்குழு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டையொட்டி, அக்குழுவின் உறுப்பினர்களுக்கு, செபம்நிறைந்த நல்வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்க-பெந்தக்கோஸ்து உரையாடல் பணிக்குழு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டைக் குறிக்கும்வண்ணம் நடைபெற்றுவரும் கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்களுக்கு இவ்வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை, இந்நிகழ்வு இயலக்கூடியதாய் அமைய உழைத்த கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவை, அவ்வுரையாடல் குழுவின் நெறியாளர்கள், என அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்கருக்கும், பெந்தக்கோஸ்து கிறிஸ்தவ சபையினருக்கும் இடையே நட்பு, தோழமை, மற்றும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல் ஆகியவற்றை வளர்க்கும்பொருட்டு, உரையாடல் மற்றும், சிந்தனை வழியாக, கடந்த ஐம்பது ஆண்டுகளாக இப்பணிக்குழு தன் பயணத்தை மேற்கொண்டுள்ளது என்று திருத்தந்தை பாராட்டியுள்ளார்.

இவ்விரு கிறிஸ்தவ சபைகளுக்கிடையே உரையாடல் தொடர்ந்து இடம்பெறவும், நற்செய்தியைப் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தோடு அறிவிக்கவும், கடவுளின் என்றென்றும் மாறாத அன்பின் வல்லமையை மற்றவருக்கு எடுத்துரைக்கவும் வேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார். 

இதன் வழியாக, எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக (காண்க.யோவா.17:21) என்ற நம் ஆண்டவரின் இறைவேண்டலுக்கு நாம் சான்றுகளாய் விளங்கமுடியும் எனவும், கடவுளின் உறுதியான அன்பு, இரக்கம் மற்றும், திருவருள் ஆகியவற்றை,  நம் சகோதரர், சகோதரிகள் தங்களின் இதயங்களிலும், வாழ்விலும், அனுபவிக்க உதவ முடியும் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்துள்ளார்.

இப்பணிக்குழுவினருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், ஞானம், மகிழ்வு, மற்றும் அமைதி நிறைந்த கடவுளின் ஆசிரை இறைஞ்சுவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குழுவினரின் செபத்தில் தன்னை மறக்காதிருக்குமாறு கேட்டுக்கொண்டு, இச்செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஜூலை 8ம் தேதி திருத்தந்தை அனுப்பிய இச்செய்தி, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் இணையபக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 July 2022, 14:41