புனித அல்போன்ஸ் சகோதரத்துவ ஆன்மிக மையத்தில் திருத்தந்தை புனித அல்போன்ஸ் சகோதரத்துவ ஆன்மிக மையத்தில் திருத்தந்தை 

புனித அல்போன்ஸ் சகோதரத்துவ ஆன்மிக மையத்தில் திருத்தந்தை

புனித அல்போன்ஸ் சகோதரத்துவ ஆன்மிக மையத்தில் வயதுமுதிர்ந்தோர், எய்ட்ஸ் நோயாளிகள், இன்னும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என ஏறத்தாழ ஐம்பது பேர் பராமரிக்கப்படுகின்றனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு தவத் திருப்பயணமாக, கனடாவில் மேற்கொண்டுவரும் ஆறு நாள்கள் கொண்ட திருத்தூதுப் பயணத்தில், ஜூலை 28, இவ்வியாழன் உள்ளூர் நேரம் காலை 8.40 மணிக்கு, கியூபெக் நகரிலுள்ள பேராயர் இல்லத்திலிருந்து அந்நாளைய பயண நிகழ்வுகளைத் தொடங்கினார். அப்பேராயர் இல்லத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Sainte-Anne-de-Beaupré எனப்படும், இயேசுவின் பாட்டியான புனித  அன்னா தேசிய திருத்தலத்திற்குக் காரில் சென்றார் திருத்தந்தை. Sainte-Anne-de-Beaupré புனித  அன்னா தேசிய திருத்தல வளாகத்தில் அமர்ந்திருந்த பெருமளவான திருப்பயணிகள் மத்தியில் திறந்த காரில் வலம்வந்து, திருப்பலியை பிரெஞ்சு மற்றும் இலத்தீன் மொழிகளில் நிறைவேற்றத் தொடங்கினார்.

திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில் திருத்தந்தை இஸ்பானிய மொழியில் மறையுரையாற்றினார். அவ்வுரையை அருள்பணியாளர் ஒருவர் உடனுக்குடன் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்தார். இத்திருப்பலியின் இறுதியில் கியூபெக் பேராயர் கர்தினால் ஜெரால்டு சிப்ரியென் லாகுருவா அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரையாற்றினார். திருத்தந்தையே தங்களின் வருகைக்கு நாங்கள் எல்லாரும், சிறப்பாக பூர்வீக இனத்தவர் நன்றி சொல்கின்றனர். எம்மாவு சீடர்கள் உயிர்த்த இயேசுவிடம் கேட்டுக்கொண்டதுபோல, நாங்களும் உம்மிடம் எம்மோடு தங்கும் என்று கேட்க விரும்புகிறோம். ஆயினும் ஓர் ஆயராக, எல்லா இடங்களிலும் உள்ள நம் சகோதரர் சகோதரிகளை நம்பிக்கையில் உறுதிப்படுத்த தங்களது மேய்ப்புப்பணி எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி திருத்தந்தையே என்று பேராயர் லாகுருவா அவர்கள் தன் நன்றியுரையை நிறைவுசெய்தார். பின்னர் அன்னை மரியாவின் தாய்க்குரிய கனிவன்பை நோக்குங்கள் என கனடா மக்களை ஊக்கப்படுத்தி, எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். புனித Anne de Beaupré திருத்தலத்திற்கு ஒரு திருப்பலி பாத்திரம் மற்றும், தங்க செபமாலையையும் திருத்தந்தை பரிசாக அளித்தார்.

புனித அல்போன்ஸ் சகோதரத்துவ ஆன்மிக மையம்

புனித அல்போன்ஸ் சகோதரத்துவ ஆன்மிக மையம்
புனித அல்போன்ஸ் சகோதரத்துவ ஆன்மிக மையம்

இத்திருப்பலியை நிறைவுசெய்து வருகின்ற வழியில் அமைந்திருக்கும் புனித அல்போன்ஸ் சகோதரத்துவ ஆன்மிக மையத்திற்கும் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அம்மையத்தில் வயதுமுதிர்ந்தோர், எய்ட்ஸ் நோயாளிகள், இன்னும் சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என ஏறத்தாழ ஐம்பது பேர் பராமரிக்கப்படுகின்றனர். அங்குச் சென்ற திருத்தந்தையை அம்மையத்தின் இயக்குநர் அருள்பணி André Morency அவர்கள் வரவேற்றார். அம்மையத்தில் அந்நோயாளிகள் பகிர்ந்துகொண்டதைக் கேட்டபின் அவர்களோடு சேர்ந்து செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். எருசலேமின் புனித அன்னை மரியா திருவுருவ வண்ணப்படத்தையும் அம்மையத்திற்குப் பரிசாக வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். பின்னர் 35 கிலோ மீட்டர் தூரம் காரில் வந்து, கியூபெக் பேராயர் இல்லத்தில் மதிய உணவருந்தி சிறிது நேரம் ஓய்வும் எடுத்துக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2022, 15:05