கஜகஸ்தான் திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கு, இலச்சினை கஜகஸ்தான் திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கு, இலச்சினை  

கஜகஸ்தான் திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கு, இலச்சினை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை, கஜகஸ்தான் நாட்டில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருகிற செப்டம்பர் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை, கஜகஸ்தான் நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கு, இலச்சினை ஆகியவை பற்றிய விவரங்கள் ஆகஸ்ட் 23, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளன.

விருதுவாக்கு, இலச்சினை ஆகிய இரண்டிற்கும் விளக்கமளித்துள்ள திருப்பீடச் செய்தித் தொடர்பகம், அமைதி, மற்றும் ஒற்றுமையின் தூதர்கள் என்ற விருதுவாக்குடன் திருத்தந்தை இத்திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார் என்று கூறியுள்ளது.

அத்திருத்தூதுப் பயணத்தின் விருதுவாக்கு, அந்த இலச்சினையின் மேல் பகுதியில் கஜகஸ்தான் மொழியிலும், கீழ் பகுதியில் இரஷ்ய மொழியிலும் எழுதப்பட்டுள்ளது என்றும், இலச்சினை, இளநீலப் பின்னணியில் வரையப்பட்டுள்ளது என்றும் அத்தொடர்பகம் கூறியுள்ளது.

இளநீலம் மற்றும் மஞ்சள் நிறங்களைக் கொண்டிருக்கும் இந்த இலச்சினையின் உட்பகுதியில், ஒலிவக் கிளையோடு, ஒன்றிணைந்த இரு கரங்களால் உருவான ஒரு புறாவும், அக்கரங்கள், அப்புறாவின் இறக்கைகளாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன,

புறாவின் இறக்கையில் வரையப்பட்டுள்ள இதயம், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொள்ளுதல், ஒத்துழைப்பு மற்றும், உரையாடலின் கனியாக விளங்கும் அன்பைக் குறிக்கின்றது என்றும், ஒலிவக் கிளை, கஜகஸ்தானின் பழங்கால நாட்டுப்புற கலையின் வடிவில் வரையப்பட்டுள்ளது என்றும், திருப்பீடச் செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

புறாவுக்குப் பின்புறம் உள்ள நீலக்கோடுகள், கஜகஸ்தான் குடியரசின் “shanyrak” சிறப்பு அடையாளத்தின் ஒரு பகுதியாகவும், நீலநிறக் கோடுகளுக்குள் அமைந்துள்ள மஞ்சள் கோடுகள் சிலுவையைக் குறிப்பதாகவும் உள்ளன.

“shanyrak”, மத்திய ஆசியாவில் வாழ்ந்த நாடோடி இன மக்கள் பயன்படுத்திய கூடாரத்தின் மேல் பகுதியைக் குறிக்கின்றது.

நீலமும், மஞ்சளும், கஜகஸ்தான் நாட்டுக் கொடியின் நிறங்களாகும். இந்நாடு, உலகில் நான்கு பக்கங்களும் நிலங்களால் சூழப்பட்டுள்ள நாடாகும். ஆயினும் அந்நாட்டில் மக்கள் தொகை குறைவே.  

கஜகஸ்தான் நாட்டிலுள்ள கஜஸ்க் இனம், அந்நாட்டில் பெருமளவான மக்கள் பின்பற்றும் சுன்னி இசுலாம் பிரிவைச் சார்ந்ததாகும். 2009ஆம் ஆண்டில் தேசிய அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ 2,50,000 இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கர் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் இரஷ்யம், கஜஸ்க் ஆகிய இரண்டும் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆகும். இந்நாட்டின் நூர்-சுல்தான் நகருக்குச் செல்லவிருக்கும் திருத்தந்தை, அந்நகரில் நடைபெறும், உலக மற்றும் பாரம்பரிய மதங்களின் தலைவர்களின் ஏழாவது உலக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுவார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 August 2022, 15:44