புதன் மறைக்கல்வியுரை: புதிய இலக்குடன் கனடா தவத் திருப்பயணம்

கனடாவில் கத்தோலிக்கத் திருஅவைக்கும், பூர்வீக இனங்களின் மக்களுக்கும் இடையேயுள்ள உறவுகளில், புதிய பக்கம் ஒன்று எழுதப்பட்டு வருகிறது – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

இத்தாலியில் கோடை காலம் தொடங்கியிருப்பதன் அறிகுறிகளை இந்நாள்களில் மிக நன்றாகவே உணர முடிகின்றது. கோடை விடுமுறை காரணமாக இந்த ஜூலை மாதம் முழுவதும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொது மறைக்கல்வியுரை நிகழ்வுகள் இடம்பெறவில்லை. மீண்டும் திருத்தந்தை, இந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தன் புதன் பொது மறைக்கல்வியுரை நிகழ்வைத் தொடங்கியிருக்கிறார். கோடையின் கடும் வெப்பம் காரணமாக, ஆகஸ்ட் 03, இப்புதனன்று திருத்தந்தையின் பொது மறைக்கல்வியுரை நிகழ்வு, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு, ஒரு மாதத்திற்குப்பின் மீண்டும் தொடங்கியிருப்பதால், பள்ளிச் சிறார் உட்பட ஏராளமான திருப்பயணிகள் அரங்கத்தை நிறைத்திருந்தனர். அப்பயணிகளோடு, தான் அண்மையில் முடித்துத் திரும்பியுள்ள கனடா நாட்டுத் திருத்தூதுப் பயணம் பற்றிய தன் பசுமையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வில் உயிர்த்த இயேசு எம்மாவு வழியில் சீடரைச் சந்தித்தல் பற்றிய லூக்கா நற்செய்திப் பகுதி, முதலில் வாசிக்கப்பட்டது. அதற்குப்பின்பு, திருத்தந்தை தன் மறைக்கல்வியுரையை இத்தாலியத்தில் தொடங்கினார்.

அதே நாளில் சீடர்களுள் இருவர் எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர் ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள் இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக் கொண்டே சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக் கொண்டும் வினவிக்கொண்டும் சென்றபோது, இயேசு நெருங்கி வந்து அவர்களோடு நடந்து சென்றார். (லூக்.24:13-15)

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் எல்லாருக்கும் காலை வணக்கம். அண்மை நாள்களில் நான் கனடா நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் பற்றிய சில சிந்தனைகளை உங்களோடு இன்று பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இத்திருத்தூதுப் பயணம், எனது மற்ற பயணங்கள் போன்று இல்லை. உண்மையில், இப்பயணம், அக்காலத்தில் கனடாவில் கத்தோலிக்கர் உட்பட பல கிறிஸ்தவர்கள், அந்நாட்டு பூர்வீக இனங்களின் மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காக மனம் வருந்தி, மன்னிப்பு கேட்கவும், அம்மக்களோடு எனது உடனிருப்பைத்  தெரிவிக்கவுமே முக்கிய நோக்கத்தைக் கொண்டிருந்தது. அக்கால காலனி அரசுகள், கனடா பூர்வீக மக்களில் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கட்டாயமாகத் திணிப்பதற்கு வகுத்திருந்த கொள்கைகளோடு அக்கிறிஸ்தவர்கள் ஒத்துழைத்ததன் அடிப்படையில், அம்மக்கள் கொடூரங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இப்பயணம் மூன்று முக்கிய நிலைகளைக் கொண்டிருந்தது. முதலில் கனடாவின் மேற்கேயுள்ள எட்மன்டன் நகரிலும், இரண்டாவது அந்நாட்டின் கிழக்கேயுள்ள கியூபெக் நகரிலும், மூன்றாவதாக அந்நாட்டின் வடக்கேயுள்ள Iqaluit நகரிலும் நடைபெர்றது. முதலில் “Bear Hills” என்றழைக்கப்படும் Maskwacis நகரில், கனடாவின் First Nations, Métis, Inuit ஆகிய மூன்று முக்கிய இனங்களின் தலைவர்கள் மற்றும், உறுப்பினர்களைச் சந்தித்தேன். இம்மக்களோடு சேர்ந்து, அவர்களின் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றை நல்நினைவுகளை நினைவுகூர்ந்தோம். ஒரு தவத் திருப்பயணமாக கனடாவில் நான் மேற்கொண்ட இத்திருத்தூதுப் பயணம், முதலில் எட்மன்டன் நகரில், கடந்த காலத்தின் உண்மையான மற்றும், வருந்ததக்க நினைவுகளோடு தொடங்கியது. அதற்குப்பின்பு அப்பயணம், கியூபெக்கில், கிறிஸ்துவின் சிலுவையால் நமக்குக் கொணரப்பட்ட மீட்பில் நம்பிக்கை வைப்பதால் பிறக்கின்ற ஒப்புரவுக்காக இறைஞ்சுவதோடு தொடர்ந்தது. இறுதியில் அப்பயணம் Iqaluit நகரில், அனைத்தையும் புதியதாக்கும் உயிர்த்த ஆண்டவரின் வல்லமையால் இயலக்கூடிய குணப்படுத்தலில் வைத்துள்ள அசையாத நம்பிக்கையோடு நிறைவுற்றது. எனது இத்திருத்தூதுப் பயணத்தின் கருப்பொருளான, “ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்வோம்” என்பது, கடந்தகாலத் தவறுகளை ஏற்று, காலனித்துவ மனநிலையைப் புறக்கணித்து, பூர்வீக இன கலாச்சாரங்களை உயர்வாக மதித்து ஊக்கப்படுத்த திருஅவை கொண்டிருக்கும் ஆவலை வெளிப்படுத்துகிறது. அதோடு, நீதி மற்றும், உண்மையான மனித உடன்பிறந்த உணர்வுக்குப் பணியாற்றுவதில், நவீன மற்றும், மூதாதையரின் கலாச்சாரங்களுக்கு இடையேயும், உலகாயுதப்போக்கு, மற்றும், ஆன்மீக விழுமியங்களுக்கு இடையேயும், நலமான, மற்றும், நல்லிணக்கமும் கொண்ட ஒரு வருங்காலத்திற்காக உழைப்பதற்குள்ள திருஅவையின் ஆவலையும் அது வெளிப்படுத்துகிறது.    

இவ்வாறு, ஜூலை 29 கடந்த வெள்ளியன்று தான் கனடா நாட்டில் முடித்துள்ள 37வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் பற்றிய சிந்தனைகளை இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இப்பயண நாள்களில் இறைவேண்டல்களோடு தன்னோடு ஆன்மீக முறையில் பயணம் மேற்கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, போலந்து நாட்டுத் திருப்பயணிகளை வாழ்த்தியபோது, யஸ்னகோரா அன்னை மரியாவிடம் உக்ரைன் நாட்டில் அமைதி நிலவச் செபிக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர், இப்புதன் பொது மறைக்கல்வியுரையில் பங்குபெற்ற அனைவர் மீதும், அவர்களின் குடும்பங்கள் மீதும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவின் மகிழ்வும் அமைதியும் நிறைக்கப்படுமாறு செபித்து அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2022, 14:12