படைப்பைப் பாதுகாக்கும் இறைவேண்டல் நாள் படைப்பைப் பாதுகாக்கும் இறைவேண்டல் நாள்  

படைப்பு பாதுகாக்கப்பட அனைவரின் அர்ப்பணத்திற்கு அழைப்பு

காலநிலை மாற்றம் குறித்த COP27, COP15 ஆகிய இரு உச்சி மாநாடுகள், காலநிலை மாற்றம், பல்லுயிரினங்களின் அழிவு ஆகிய இரு நெருக்கடிகளைக் களைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பராமரிப்பதற்கு உலகினரின் உண்மையான அர்ப்பணம் அவசியம் என்று, ஆகஸ்ட் 31, இப்புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் வழங்கிய புதன் பொது மறைக்கல்வியுரைக்குப்பின்னர் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

செப்டம்பர் 01, இவ்வியாழனன்று கொண்டாடப்படும் படைப்பைப் பாதுகாக்கும் இறைவேண்டல் நாளை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இப்பூமிக்கோளம் பாதுகாக்கப்படுவதற்கு உலகினர் எல்லாரும் இறைவேண்டல் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

“படைப்பின் குரலைக் கேளுங்கள்” என்ற தலைப்பில், இவ்வாண்டில் சிறப்பிக்கப்படுகின்ற இந்நாள், இப்பூமி பராமரிக்கப்பட ஓர் உண்மையான அர்ப்பணத்தை அனைவரிலும் பேணிவளர்க்கும் என்ற தன் நம்பிக்கையையும் திருத்தந்தை தெரிவித்தார்.

படைப்பை மிதமிஞ்சி நாம் நுகர்வதால் ஏற்படும் கடுமையான வலியால் பெருமூச்சு விடுகின்ற இப்பூமி, இந்த அழிவு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்று நம்மிடம் கெஞ்சிக் கேட்கிறது என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐக்கிய நாடுகள் நிறுவனம் நடத்தும் காலநிலை மாற்றம் குறித்த COP27 மற்றும், COP15 ஆகிய இரு உலக உச்சி மாநாடுகள், காலநிலை மாற்றம், பல்லுயிரினங்களின் அழிவு ஆகிய இரு  நெருக்கடிகளைக் களைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற தன் எதிர்பார்ப்பையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

படைப்பின் காலம்

கடவுளின் படைப்பு பாதுகாக்கப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, செப்டம்பர் முதல் தேதியிலிருந்து, அசிசி நகர் புனித பிரான்சிசின் திருநாளாகிய அக்டோபர் 4ம் தேதி வரை, உலகின் அனைத்துக் கிறிஸ்தவர்களும் படைப்பின் காலம் என்ற நிகழ்வைச் சிறப்பிக்கின்றனர்.

ஈராக் மக்களுக்காக செபம்

மேலும், இப்புதன் காலையில் வழங்கிய மறைக்கல்வியுரைக்குப்பின்னர், அண்மை நாள்களில் ஈராக் தலைநகர் பாக்தாதில் இடம்பெறும் வன்முறைகள் பற்றிக் கவலையோடு குறிப்பிட்டு, அந்நாட்டு மக்களுக்கு ஆண்டவர் அமைதி அருளவேண்டும் என கடவுளை மன்றாடுவோம் என்று கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த ஆண்டில் ஈராக்கிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டபோது, பல்வேறு மதங்கள் மத்தியில் அமைதியான நல்லிணக்கம் நிலவுவதையும், அந்நாடு சாதாரண வாழ்வுக்குத் திரும்ப ஆவல்கொண்டிருப்பதையும் உணர்ந்தேன், அம்மக்கள் இந்த இலக்கை எட்டவும், தற்போதைய பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் உரையாடலும், உடன்பிறந்த உணர்வுமே முக்கிய வழிகள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2022, 13:16