திருத்தந்தை: நம்பிக்கைச் சுடரை மீண்டும் ஒளிரச்செய்யுங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
இயேசு, தாலாட்டுப் பாடலை அல்ல. மாறாக நற்செய்தி எனும் தீயை மூட்டவே இம்மண்ணுலகிற்கு வந்தார் என்றும், மனமாற்றத்தின் பாதையில் நாம் முன்னோக்கிச் செல்லவேண்டும் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 14, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.
“மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” (லூக்.12:49) என்ற திருச்சொற்களைக் கொண்ட இஞ்ஞாயிறு லூக்கா நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, இயேசுவின் சக்திமிக்க இச்சொற்கள் நமக்குச் சவாலாக உள்ளன என்று கூறியுள்ளார்.
நற்செய்தி தீ போன்றது
கடவுள் நம் ஒவ்வொருவர் மீதும் கொண்டிருக்கும் அன்பின் நற்செய்தியை இயேசு இவ்வுலகிற்குக் கொணர்ந்தார் என்றும், அதனாலேயே, நற்செய்தி, தீ போன்றது என அவர் கூறுகிறார் என்றும் தெரிவித்துள்ள திருத்தந்தை, இந்நற்செய்தி, வரலாற்றுக்குள் வெடிக்கும்போது, அது நம் வாழ்வின் பழைய முறைகளைத் திசைதிருப்புகின்றது, மற்றும், நாம் தன்னலத்தினின்று வெளியேறி, உயிர்த்த கிறிஸ்துவில் புதிய வாழ்வுக்கு நம்மை இட்டுச்செல்கிறது என்றும் கூறியுள்ளார்.
நற்செய்தி, ஒருவரின் இதயத்தில் உயிரூட்டம் பெறும்போது, அது மனமாற்றத்திற்கும், கடவுளுக்கும், நம் சகோதரர் சகோதரிகளுக்கும் திறந்த இதயம் உள்ளவர்களாக இருப்பதற்கும் நம்மை உந்தித் தள்ளுகிறது என்றுரைத்துள்ள திருத்தந்தை, தீ போன்ற நற்செய்தி, கடவுளன்பால் நம்மை வெம்மைப்படுத்தும்போது, நமது தன்னலத்தை எரிக்க அது விரும்புகிறது, மற்றும், நம்மை அடிமைகளாக்கும் போலியான சிலைகளை உதறித்தள்ளி, வாழ்வின் இருளடர்ந்த பக்கத்தை ஒளிரச்செய்கிறது என எடுத்துரைத்தார்.
கடவுளன்பில் மூழ்கியிருப்போம்
எலிசா, எரேமியா போன்ற திருவிவிலிய இறைவாக்கினர்களின் பாதையில் சென்ற இயேசுவும், சிலுவைச் சாவை ஏற்கும்வரை வாழ்வு முழுவதும் கடவுளன்பில் மூழ்கியிருந்தார் எனவும், ஒளியோடும், வல்லமையோடும் நிறைந்துள்ள தீ போன்று அவர் தூய ஆவியாரால் நிரம்பியிருந்தார் எனவும், அவர் கடவுளின் புதிரான திருமுகத்தின் திரையை அகற்றிவிட்டார் எனவும், மனிதப் பிரிவினைச் சுவர்களைத் தகர்த்தெறிந்து, புறக்கணிக்கப்பட்டதாக உணர்கின்றவர்களுக்கு, இவ்வாறு நம்பிக்கையளித்தார் எனவும் திருத்தந்தை விளக்கியுள்ளார்.
நம்பிக்கைச் சுடரை மீண்டும் ஒளிரச்செய்யுங்கள்
கடவுளன்பின் மீதுள்ள நம்பிக்கைச் சுடரை மீண்டும் ஒளிரச்செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உரையாற்றிய திருத்தந்தை, நற்செய்தி மீது நாம் கொண்டிருக்கும் பேரார்வம் எத்தகையது என்பது குறித்து சிந்தித்துப் பார்க்குமாறு, அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
நமக்காகப் பரிந்துபேசும், தூய ஆவியாரின் தீயை வரவேற்ற புனித அன்னை, இம்முயற்சிகளில் நமக்கு உதவுமாறு அவரிடம் வேண்டுவோம் என அழைப்புவிடுத்து, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்