திருத்தந்தை: மரண தண்டனை அனுமதிக்கப்படமுடியாதது

மனிதரின் மாண்பைத் தாக்கும் மரண தண்டனை, ஒவ்வொரு நாட்டிலும் சட்டப்படி ஒழிக்கப்பட மன்றாடுவோம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

அனைத்து மனிதரின் வாழ்வு மதிக்கப்படல், மனமாற்றத்திற்கு வாய்ப்பு ஆகிய இரண்டுமே, மரண தண்டனையைப் புறக்கணிப்பதற்குரிய நோக்கங்களாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 31, இப்புதனன்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாதத்திற்கும் தான் தேர்ந்தெடுத்துள்ள பொதுக் கருத்து குறித்து காணொளிச் செய்தி வழியாகத் தெளிவுபடுத்தி வருகின்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரண தண்டனை ஒழிக்கப்படுவதற்காகச் செபியுங்கள் என்ற விண்ணப்பத்தோடு, இவ்வாண்டு செப்டம்பர் மாத தனது பொதுக் கருத்து குறித்த தன் சிந்தனைகளை எடுத்துரைத்துள்ளார்.

மனிதரின் மாண்பைத் தாக்கும் மரண தண்டனை, ஒவ்வொரு நாட்டிலும் சட்டப்படி ஒழிக்கப்பட மன்றாடுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, மரண தண்டனை, கைதிகளுக்கு எவ்வித நீதியையும் வழங்குவதில்லை, மாறாக, பழிவாங்கும் உணர்வையே ஊக்கப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

மரண தண்டனை சட்டமுறைப்படி தேவையற்றது எனவும், இது, நீதியைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புக்கு வழியமைக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரண தண்டனை, அறநெறிப்படி அனுமதிக்கப்படமுடியாதது எனவும், இது நாம் பெற்றுள்ள வாழ்வு என்னும் மிக முக்கியமான கொடையை அழிக்கின்றது எனவும் கூறியுள்ளார்.

ஒருவர் கடைசி நிமிடத்தில்கூட மனம் மாறுவார் மற்றும், மாற்றத்திற்குத் தயாராகுவார் என்பதை நாம் மறக்கக்கூடாது என்றும், மரண தண்டனை, நற்செய்தியின் ஒளியில் ஏற்றுக்கொள்ளப்படமுடியாதது என்றும், கொலை செய்யாதே என்ற ஆண்டவர் கட்டளை, குற்றமற்றவர்கள், குற்றவாளிகள் ஆகிய இருவரையுமே குறிப்பிடுகிறது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இதற்கிடையே, உலகில் ஏறத்தாழ 170 நாடுகள் மரண தண்டனை சட்டத்தை இரத்து செய்துள்ளன, இந்நாடுகள், கடந்த பத்து ஆண்டுகளுக்குமேலாக அதனை நிறைவேற்றவில்லை, எனினும் 55 நாடுகளில் இத்தண்டனை  வழங்கும் பழக்கம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என ஐ.நா. கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2022, 13:28