புதன் மறைக்கல்வியுரை: தெளிந்துதேர்தலுக்கு கடவுளோடு அன்புறவு....

நம் வாழ்வைச் சிறப்பாக வாழ்வதற்கு தெளிந்துதேர்வுசெய்யும் முறையினைக் கற்றுக்கொள்வது முக்கியம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

ஆகஸ்ட் 31, இப்புதன் உள்ளூர் நேரம் காலை ஒன்பது மணியளவில், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த பல்வேறு நாடுகளின் திருப்பயணிகளுக்கு, தெளிந்துதேர்தல் என்ற புதியதொரு தலைப்பில் தன் பொது மறைக்கல்வியுரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். கடந்த பதினெட்டு புதன் பொது மறைக்கல்வியுரைகளில் முதுமை பற்றிய தன் சிந்தனைகளை வழங்கிவந்த திருத்தந்தை, தெளிந்துதேர்தல் என்றால் என்ன, அது நம் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மையப்படுத்தி இப்புதன் தன் மறைக்கல்வியுரையை முதலில் இத்தாலியத்தில் தொடங்கினார். இம்மறைக்கல்வியுரைக்கு திருத்தந்தை தெரிவுசெய்த, புதையல் உவமை, வலை உவமை ஆகிய இரண்டும் மத்தேயு நற்செய்தியிலிருந்து வாசிக்கப்பட்டன.

“ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார்... “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். (மத்.13:44,47-48)

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர், சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம். இன்று நம் மறைக்கல்வியில் தெளிந்துதேர்தல் என்ற புதிய பகுதியைத் தொடங்குதிறோம். நம் ஒவ்வொருவரையும் பொருத்தவரை, தெளிந்துதேர்வுசெய்தல் முக்கியமான ஒரு செயலாகும். ஏனென்றால் தேர்வுசெய்தல், வாழ்வின் இன்றியமையாத அங்கமாக இருக்கின்றது. உணவு, உடை, படிப்பு, வேலை, உறவு என அனைத்தையும் தேர்வுசெய்வதில் நம் வாழ்வின் திட்டம் தெளிவாக உணரப்படுகிறது. அதேபோல் கடவுளோடுள்ள நம் உறவும் இருக்கின்றது. இயேசு, நற்செய்தியில் சாதாரண வாழ்விலிருந்து உருவகங்களைக் குறிப்பிட்டு, தெளிந்துதேர்வுசெய்தல் பற்றி நம்மிடம் பேசுகிறார். எடுத்துக்காட்டாக, நல்ல மீன்களைத் தெரிவுசெய்து, கெட்டவற்றைப் புறக்கணிக்கின்ற மீனவர், பல முத்துக்களில் மிகவும் மதிப்புமிக்க முத்தை இனம்காணும் வர்த்தகர், மற்றும், நிலத்தில் உழுகின்றபோது அங்கு மறைந்திருந்த புதையலைக் கண்டுபிடிப்பவர் (காண்க.மத்.13:44-48). இயேசு, இவர்கள் செயல்படுவதை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தி, நம் அன்றாட வாழ்வில் கடவுளின் திட்டத்திற்கேற்ப வாழ்வை வாழ, ஞானத்தோடு தெளிந்துதேர்வுசெய்யவேண்டியதன் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பிக்கிறார். உண்மையான தெளிந்துதேர்வுசெய்தலுக்கு, அறிவு, உள்ளுணர்வு, அனுபவம் ஆகியவற்றோடு ஞானமுள்ள இதயம், உறுதியான அர்ப்பணம், மற்றும், விடாமுயற்சியும் தேவைப்படுகின்றன. கடவுள் நமக்கு வழங்கியுள்ள சுதந்திரத்தைச் செயல்படுத்தும் ஒரு முயற்சியாக, நமக்கும், நம் உலகிற்கும் கடவுள் வகுத்துள்ள திட்டத்தில் நம் இடத்தைக் கண்டுணரும் வழிகளை ஆன்மீக வாழ்வில் தெளிந்துதேர்வுசெய்கிறோம். நல்லதோ தீயதோ எதுவாக இருந்தாலும் நாம் எடுக்கும் தீர்மானங்கள், இவ்வுலகை கடவுள் விரும்புவதுபோல், ஓர் அற்புதமான, வியக்கத்தக்க தோட்டமாக அல்லது, வாழ்விழந்த பாலைநிலமாக அமைக்கும். கடவுளோடு நமக்குள்ள அன்புறவு மற்றும், நம் மனிதச் சுதந்திரம் ஆகியவற்றிலிருந்து பிறக்கும் உண்மையான தெளிந்துதேர்வுசெய்தல், ஓர் ஆழமான ஆன்மீக மகிழ்ச்சியையும், நிறைவையும் கொணரும். தூய்மை, ஞானம், நற்செய்தியின் மீட்பளிக்கும் உண்மைக்குப் பிரமாணிக்கம் ஆகியவற்றில் வாழ்வதற்கு தினமும் நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் தூய ஆவியார் நம்மை ஒளிரச்செய்யவும், வழிநடத்தவும் அவரது உதவியை நாடுவோம்.

புதன் மறைக்கல்வியுரை 310822
புதன் மறைக்கல்வியுரை 310822

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் தெளிந்துதேர்வுசெய்வதற்கு ஆண்டவரோடு நெருங்கிய உறவு தேவை என்பதை வலியுறுத்தி, இப்புதன் பொது மறைக்கல்வியுரையை நிறைவுசெய்தார். செப்டம்பர் 01, இவ்வியாழனன்று படைப்பைப் பாதுகாக்கும் இறைவேண்டல் நாளைக் கொண்டாடுகிறோம், காலநிலை மாற்றம் முன்வைத்துள்ள பிரச்சனைகள் தீர்க்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என திருத்தந்தை கேட்டுக்கொண்டார். மேலும், இந்நாள்களில் பாக்தாத் நகரில் இடம்பெறும் வன்முறைகள் பற்றிக் கவலையோடு குறிப்பிட்டு, ஈராக் மக்களுக்கு ஆண்டவர் அமைதி அருள்வாராக என்றும் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசிரையும் வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2022, 11:11