கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே 

FABC பொதுப் பேரவை நிறைவு நிகழ்வில் கர்தினால் தாக்லே

1970ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட FABC கூட்டமைப்பு, கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டில் தன் பொன்விழா கொண்டாட்டங்களை நடத்த இயலாமல் இருந்தது

மேரி தெரேசா: வத்திக்கான்

ஆகஸ்ட் 28, இஞ்ஞாயிறு காலையில் மத்திய இத்தாலியிலுள்ள L’Aquila நகருக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டு, அந்நகரின் Collemaggio அன்னை மரியா பசிலிக்காவில் புனிதக் கதவைத் திறந்து வைப்பார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு காலை 8.30 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை, L’Aquila நகரின் Gran Sasso அரங்கத்தை காலை 9 மணியளவில் சென்றடைவார். அந்நகரின் பேராயர் கர்தினால் Giuseppe Petrocchi அவர்களும், நகரின் முக்கிய தலைவர்களும் திருத்தந்தையை வரவேற்பர். அங்கிருந்து காரில் அந்நகரின் பசிலிக்காவுக்குச் செல்லும் திருத்தந்தை, பத்து மணியளவில் அப்பசிலிக்கா வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றி, மூவேளை செப உரையும் உரையாற்றுவார். பின்னர் மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, பகல் 13.15 மணியளவில் வத்திக்கான் வந்து சேர்வார்.  

FABC நிறைவு நிகழ்வில் கர்தினால் தாக்லே

மேலும், FABC எனப்படும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு, தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் நடத்திவரும் ஐம்பதாவது பொதுப் பேரவையின் நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ள, தனது சிறப்புப் பிரதிநிதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களை, ஆகஸ்ட் 27, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார்.

இப்பொதுப் பேரவையின் நிறைவு நாளான வருகிற அக்டோபர் மாதம் 30ம் தேதியன்று பாங்காக் பேராலயத்தில் நடைபெறும் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றி, அப்பேரவையை நிறைவு செய்வார், பிலிப்பீன்ஸ் நாட்டவரான கர்தினால் தாக்லே.

1970ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட FABC கூட்டமைப்பு, கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டில் தன் பொன்விழா கொண்டாட்டங்களை நடத்த இயலாமல் இவ்வாண்டில் அவற்றை நடத்தி வருகிறது.

கம்மம் ஆயர் பணி ஓய்வு

மேலும், இந்தியாவின், ஆந்திர மாநிலத்தின் கம்மம் மறைமாவட்ட ஆயர் Paul Maipan அவர்களின் பணி ஓய்வை ஆகஸ்ட் 27, இச்சனிக்கிழமையன்று ஏற்றுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 August 2022, 14:56