விண்ணேற்படைந்த அன்னை மரியா, அகமகிழ நம்மை அழைக்கிறார்
மேரி தெரேசா: வத்திக்கான்
அன்னை மரியாவின் பற்றுறுதி, நம்பிக்கை மற்றும், புரட்சிகரமான முன்மாதிரிகை ஆகியவற்றை நாம் பின்பற்றும்போது அகமகிழுமாறு நம்மை அவர் அழைக்கிறார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 15, இத்திங்களன்று மூவேளை செப உரையில் கூறியுள்ளார்.
அன்னை மரியாவின் விண்ணேற்பு பெருவிழாவான ஆகஸ்ட் 15, இத்திங்களன்று நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, நம் அன்னையாம் மரியா, நம் கரங்களைப் பற்றிக்கொண்டு, உடன்பயணித்து வருகிறார், மற்றும், அகமகிழவும் அழைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
அன்னை மரியாவுக்கும், அவரது உறவினர் எலிசபெத்துக்கும் இடையே இடம்பெற்ற உரையாடல் பற்றிக் கூறும் இப்பெருவிழா நற்செய்தி வாசகத்தை (லூக்.1,39-56) மையப்படுத்தி மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை, வாழ்வின் அனைத்துத் தருணங்களிலும் மரியா வகித்துவரும் முக்கிய பங்கையும், அவரது இருப்பையும் உணருமாறு திருப்பயணிகளைக் கேட்டுக்கொண்டார்.
நம் வாழ்வில் கடவுளின் உடனிருப்பு குறித்தும், அவர் நம்மை ஆட்கொள்ள அனுமதிப்பது குறித்தும் சிந்தித்துப் பார்க்குமாறு சிறப்பாக கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கருணை, மற்றும், தாழ்நிலை ஆகியவை வழியாக, மாபெரும் செயல்கள் புரியும் கடவுளின் பணியைத் தெளிந்துதேர்வு செய்வதற்கு, என்னால் முடிகின்றதா? என்று ஒவ்வொருவரும் தங்களையே கேட்டுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.
இந்தப் பெருவிழாவில் மரியா, நம்பிக்கையின் பாடலைப் பாடுகிறார், மற்றும், நம்மில் நம்பிக்கையை மீண்டும் சுடர்விடச் செய்கின்றார் என்றுரைத்துள்ள திருத்தந்தை, உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்தில் வெற்றியுடன் நுழைந்த முதல் படைப்பாகிய அன்னை மரியா, நாம் பாவத்திற்கு அடிமையாகாமல் இருந்தால், நமக்கும் விண்ணகம் எட்டுகின்ற தூரத்தில் உள்ளது எனக் காட்டுகிறார் என்று எடுத்துரைத்துள்ளார்.
அருள்மிகப் பெற்ற மரியே வாழ்க
மரியா எலிசபெத்தின் வீட்டை அடைந்து அவரை வாழ்த்தியபோது, எலிசபெத்து மரியாவை நோக்கி, “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என வாழ்த்திய, நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும், வியப்புநிறைந்த சொற்கள், அருள்மிகப் பெற்ற மரியே என்ற செபத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளதைக் குறிப்பிட்டார் திருத்தந்தை.
மிக அழகான மற்றும், நன்கு பழக்கப்பட்ட இந்த செபத்தை நாம் செபிக்கும்போதெல்லாம், எலிசபெத்து போன்று நாமும் மரியாவை வாழ்த்துகிறோம், அவர் இயேசுவை நமக்குக் கொணர்ந்ததால், அவரை பேறுபெற்றவர் என்று கூறுகிறோம் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மரியா, எலிசபெத்துவின் ஆசிரை ஏற்றதோடு, ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது என்ற அவரின் பாடல், கடவுள், மரியா வழியாக உலகின் காரியங்களில் புதிய நியதியை உருவாக்கியுள்ளார் எனவும், சிறியோரையும் தாழ்நிலையில் உள்ளோரையும் உயர்த்துகிறார் எனவும் தெரிவிக்கிறது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்