மடான்சாஸ் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கில் தீ மடான்சாஸ் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கில் தீ  

உக்ரைன், கியூபா நாடுகளுக்காக திருத்தந்தை இறைவேண்டல்

ஆகஸ்ட் 10, இப்புதன் பொது மறைக்கல்வியுரையை ஆற்றியபின்னர், உக்ரைனிலும், கியூபாவிலும் துன்புறும் மக்களை நினைவுகூர்ந்து அவர்களுக்காக இறைவேண்டல் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி தெரேசா: வத்திக்கான்

உக்ரைனில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் கொடூரமான போரால் நல்லதொரு வருங்காலத்தைத் தேடி புலம்பெயர்வோர், மற்றும், கியூபாவில் எரிபொருள் கிடங்கு தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளோர் ஆகிய அனைவரோடும் தன் உடனிருப்பைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 10, இப்புதன் காலையில், வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பன்னாட்டுத் திருப்பயணிகளுக்கு, முதுமை குறித்த தன் புதன் பொது மறைக்கல்வியுரையை வழங்கிய பின்னர், உக்ரைனிலும், கியூபாவிலும் துன்புறும் மக்களுக்காக இறைவேண்டல் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மறைக்கல்வி நிகழ்வில் கலந்துகொண்ட இத்தாலிய திருப்பயணிகளை வாழ்த்தியபோது, கிழக்கு ஐரோப்பாவில் இடம்பெறும் போரினால் மக்கள் எதிர்கொள்ளும் கடுந்துயரங்களையும், போர் தவிர, வறுமை மற்றும், வன்முறையாலும், நல்லதொரு வருங்காலத்தைத் தேடி, கடும் ஆபத்துக்கள் மத்தியில், கடல் மற்றும், நிலம் வழியாகப் புலம்பெயரும் மக்களையும் திருத்தந்தை நினைவுகூர்ந்தார்.

ஒன்றிப்பு இன்றி, குடும்பத்திலோ, திருஅவையிலோ, அமைதியைக் கட்டியெழுப்புதல் எளிதான காரியம் அல்ல, ஆயினும் இது நல்ல பணி என்பதால், இதனை நாம் ஆற்றவேண்டும் என்றும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு நாளும் இத்தாலியின் லாம்பெதூசா தீவில் வந்திறங்கும் புலம்பெயர்ந்தோர் குறித்தும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்த இரவில் மட்டும் மூன்று படகுகளில் 41 பேர் வந்திறங்கியுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

கியூபாவிற்காக திருத்தந்தை செபம்

மேலும், கியூபா நாட்டின் மடான்சாஸ் (Matanzas) பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கை, ஆகஸ்ட் 05, கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் பலியானவர்கள், மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காக, விண்ணக அரசியாம் நம் அன்னையின் பரிந்துரையை வேண்டுவோம் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இந்த பயங்கரமான தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரோடும் திருத்தந்தை ஆன்மிக அளவில் அருகிலிருப்பதை வெளிப்படுத்தும் தந்திச் செய்தியை, திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், கியூபாவின் ஆயர் பேரவை தலைவர் ஆயர் Emilio Aranguren Echeverría அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரில் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பயங்கரமான தீ விபத்து, கியூப வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகக் கொடூரமான விபத்து என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2022, 13:20