தூய ஆவியானவருக்குப் பணிவுடன் செவிசாய்ப்போம்: திருத்தந்தை
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடவுளை விடாமுயற்சியுடன் தேடுவது, திருவிவிலியத்தை நன்கு அறிந்திருப்பது, திருச்சடங்குகளில் பங்கேற்பது ஆகியவை உங்கள் பணிக்கான பலனைத் தரும் திறவுகோலாகும் என்று பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள வந்த குழுவிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 25, இவ்வியாழனன்று, உலகுசார் துறவு சபையினர் நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
மக்களுடன் இணைந்து செல்லும் திருஅவை தொலைவில் இல்லை, அது உலகத்திலிருந்து பிரிக்கப்படவில்லை, ஆனால் உலகத்திலும் வரலாற்றிலும் ஒன்றறக் கலந்து உப்பாகவும் ஒளியாகவும், ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் மீட்பின் விதையாகவும் மிளிர்கிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உங்களின் வித்தியாசமான பணி, மக்களை மையப்படுத்தியாக இருக்கவும், இன்று ஆண்கள், மற்றும் பெண்களின் இதயங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து புரிந்து கொள்ளவும், அவர்களுடன் ஒன்றிணைந்து மகிழவும், துன்பப்படவும், நெருக்கமான முறையில் உங்களை வழிநடத்துகிறது என்று விளக்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உழைப்பும் வலியும் அதிகமாக இருக்கும், உரிமைகள் புறக்கணிக்கப்படும், போர் மக்களைப் பிளவுபடுத்தும், மனித மாண்புகள் மறுக்கப்படும் தெருக்களில், அனுபவம் பெறுவதற்கு நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன்னை மீட்டெடுக்க மேற்கொள்ளும் ஒவ்வொருவருடைய பயணத்திலும் திருஅவையின் முகத்தைக் காண்பிப்பதில் நீங்கள் சோர்வடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒன்றிணைந்த நிலையில் மட்டுமே நாம் கடவுளின் மக்களாக வாழமுடியும் என்றும், ஆண் பெண் அனைவருடனும் இணைந்து வாழ்வின் அர்த்தத்தைத் தேடுபவர்களாக, இரக்கம்நிறை மகிழ்வுடன் வாழ்ந்திட முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
உங்கள் பணிகளில் நீங்கள் இன்னும் எவ்வாறு திறம்படச் செயல்படலாம் என்பதை புரிந்துகொள்வதில் தூய ஆவியானவருக்குப் பணிவுடன் செவிசாய்க்க உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் குரலுக்குச் செவிமடுப்பதற்கும், காலத்தின் தேவைகளை அறிந்து கொள்வதில் உங்களை ஞானமுடன் வழிநடத்திச் செல்வதற்கும் திருஅவையின் மேய்ப்பர்கள் உங்களுடன் பயணிப்பது அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்