நான்கு நாடுகளுக்கு முதன் முறையாக கர்தினால்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
ஆகஸ்ட் 27, இச்சனிக்கிழமை மாலையில் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்படும் இருபது புதிய கர்தினால்களுள் நான்கு பேர் மங்கோலியா, சிங்கப்பூர், கிழக்குத் திமோர், பரகுவாய் ஆகிய நான்கு நாடுகளில் மறைப்பணியாற்றுகின்றவர்கள், இந்நான்கு நாடுகளுக்கும் முதல் முறையாக கர்தினால்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
20 புதிய கர்தினால்களுள் 16 பேர் புதிய ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்கள். இப்புதிய கர்தினால்களுள் மேலும், இந்த 20 பேரில் 7 பேர் துறவியர்.
இந்த இருபது புதிய கர்தினால்களோடு, கத்தோலிக்கத் திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 226 ஆகவும், புதிய ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய எண்பது வயதுக்குட்பட்டோரின் எண்ணிக்கை 132 ஆகவும் உள்ளன.
தற்போது கர்தினால்கள் அவையில் துறவு சபைகளைச் சார்ந்தவர்களில் சலேசிய சபையினரே அதிகமாக உள்ளனர். அச்சபையில் பத்து கர்தினால்கள் உள்ளனர்.
திருஅவையில் தற்போது இருக்கின்ற மொத்த கர்தினால்களுள் 112 பேர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டவர்கள். மேலும், தற்போதுள்ள கர்தினால்களுள் 80 வயதுக்குட்பட்டவர்களில் 11 பேர் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களாலும், 38 பேர் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களாலும், 83 பேர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களாலும் அறிவிக்கப்பட்டவர்கள்.
ஆகஸ்ட் 27, இச்சனிக்கிழமை நிலவரப்படி, ஐரோப்பாவிலுள்ள 108 கர்தினால்களுள் 54 பேரும், அமெரிக்காவிலுள்ள 60 கர்தினால்களுள் 38 பேரும், ஆசியாவிலுள்ள 30 கர்தினால்களுள் 20 பேரும், ஆப்ரிக்காவிலுள்ள 27 கர்தினால்களுள் 17 பேரும், ஓசியானியாவிலுள்ள 5 கர்தினால்களுள் 3 பேரும் புதிய ஒரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்கள்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்