மனிதகுலத்தின் அமைதிக்காகப் பணியாற்றுங்கள் : திருத்தந்தை

மதங்களுக்கு இடையேயான உரையாடல் என்பது அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு உயர்ந்த பாதை. இது அவசியமானது மற்றும் மாற்ற முடியாதது - திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் -வத்திக்கான்

கஜகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில், செப்டம்பர் 14 இப்புதன் தொடக்கி, நடைபெற்று வரும், உலகின் பெரிய மற்றும், பூர்வீக மதங்களின் தலைவர்களின் ஏழாவது மாநாட்டில், செப்டம்பர் 15, வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய நிறைவு உரை.

அன்புச் சகோதரர் சகோதரிகளே, நாம் ஒன்றிணைந்து இந்தப் பாதையில் பயணித்துள்ளோம், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்ததற்கும், உங்கள் நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களின் வளமையை உங்களோடு இங்குக் கொண்டு வந்ததற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.   

அமைதி மற்றும் ஒற்றுமையின் தூதுவர்கள்

"அமைதி மற்றும் ஒற்றுமையின் தூதுவர்கள்". என்ற விருதுவாக்குடன் அமைந்த எனது திருப்பயணம் இப்போது முடிவுக்கு வருகிறது. இந்த நாள்களில், மதத்தின் உண்மையான மற்றும் பிரிக்க முடியாத அதன் தனிச் சிறப்பை உறுதிப்படுத்துவதற்காக, நாம் மீண்டும் ஒன்றிணைய வேண்டியது மிகவும் அவசியம் என்பது இந்நாள்களில் உறுதியாகியிருக்கிறது.

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அடிப்படைவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் வெறுப்பு, விரோதம், வன்முறை மற்றும் போர் ஆகியவற்றுக்கான பிற ஊக்குவிப்புக்கள், அவற்றின் உந்துதல்கள் அல்லது குறிக்கோள்கள் எதுவாக இருந்தாலும், மதத்தின் உண்மையான நெறிமுறைகளுடன் அவைகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதும், மிகத் தீர்க்கமான சொற்களால் இவைகள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

இதன் விளைவாக, தங்கள் மதநம்பிக்கைகளுக்குச் சட்டப்பூர்வமாகக் குரல் கொடுக்க விரும்புவோர் எப்போதும் மற்றும் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும். இருப்பினும் எத்தனையோ பேர் தங்கள் மதநம்பிக்கையின் காரணமாக இப்போதும் துன்புறுத்தப்படுகிறார்கள், பாகுபாடு காட்டப்படுகிறார்கள்!

ஆக, மதச் சுதந்திரம் என்பது வெறும் கண்துடைப்பாக அமைந்துவிடக்கூடாது. இந்தக் காரணத்திற்காக, கத்தோலிக்கத் திருஅவையும், கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் மாண்பும், மனித குடும்பத்தின் ஒற்றுமையையும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. மனித நேயத்தின் அனைத்து வடிவங்களும் ஒரே மனித சமூகம்தான் என்றும் திருஅவை நம்புகிறது.  

எனவே, திருப்பீடமும் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான அதன் அலுவலகப் பணிகள் வழியாக அதில் தீவிரமாகப் பங்காற்றி வருகிறது. திருப்பீடம் இப்பணிகளை இன்னும் சிறப்பாகத் தொடர விரும்புகிறது, காரணம், மதங்களுக்கு இடையேயான உரையாடல் என்பது அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு உயர்ந்த பாதை என்றும், இது அவசியமானது மற்றும் மாற்ற முடியாதது என்றும் திருப்பீடம் நம்புகிறது.

எந்தயொரு மனிதரும், தன்னைச் சுற்றியுள்ள பிற உயிரினங்கள் மீது அன்பு காட்டாமல், படைப்பாளருக்கு உண்மையான இறைநம்பிக்கையை வெளிப்படுத்த முடியாது. இக்கருத்தையே இந்த மாநாடும் வெளிப்படுத்தியுள்ளது. அவ்விதத்தில் மூன்று வார்த்தைகளை உங்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

அமைதி

முதலாவதாக அமைதி. இதுவே எல்லாவற்றின் தொகுப்பாகவும், இதயப்பூர்வமான வேண்டுகோளின் வெளிப்பாடாகவும், கனவு மற்றும் நமது வாழ்க்கைப் பயணத்தின் குறிக்கோளாகவும் அமைகிறது. உடன்பிறந்த உணர்வுநிலையால் அமைதி பிறக்கிறது. இவ்வமைதி, அநீதி மற்றும் சமத்துவமின்மைக்கு எதிரானப் போராட்டத்தில் வளர்கிறது. பிறருடைய தேவைகளின்போது உதவிக்கரங்கள் நீட்டப்படுவதன் வழியாக இது கட்டி எழுப்பப்படுகிறது.

ஆகவே, மனிதகுலத்தின் நன்மைக்காக ஆயுதங்களை விடுத்து, அமைதிக்காகப் பணியாற்றுங்கள் என்று கடவுளின் பெயரால், உங்கள் அனைவரிடமும் நாங்கள் வேண்டுகிறோம். அமைதிக்காகப் பணியாற்றுவதன் வழியாக மட்டுமே வரலாற்றில் உங்களுக்கான பெயரை உருவாக்க முடியும். அக்கறை, கனிவான அன்பு, வாழ்க்கையை உருவாக்கும் திறன் ஆகியவை இல்லாமையே அமைதியற்ற நிலைக்குக் காரணங்களாக அமைகின்றன.

பெண்கள்

இரண்டாவதாக பெண்கள். பெண்கள்தாம் உலகிற்கு அக்கறையையும் வாழ்க்கையையும் வழங்குகிறார்கள்: அவர்களே அமைதிக்கான பாதையாகவும் அமைகிறார்கள். இந்தக் காரணத்திற்காக, அவர்களின் மாண்பை பாதுகாப்பதன் அவசியத்தையும், குடும்பம் மற்றும் சமூகத்தின் சம உறுப்பினர்களாக அவர்களின் சமூக நிலையை மேம்படுத்துவதற்கான அவசியத்தையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

மேலும், பெண்களை நம்பி பெரிய பதவிகளும் பொறுப்புகளும் ஒப்படைக்கப்பட வேண்டும். பெண்கள் அதிகளவில் மதிக்கப்படுவதையும், அங்கீகரிக்கப்படுவதையும், ஈடுபாடு காட்டுவதையும் உறுதிசெய்வதில் நம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வோம்.

இளையோர்

மூன்றாவதாக இளையோர். நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் அமைதி மற்றும் ஒற்றுமையின் தூதுவர்களாக இருப்பவர்கள் இளையோரே! மற்றவர்களைக்  காட்டிலும், அவர்கள்தான், படைப்பின் பொதுவான இல்லமாகிய இப்பூமியின் அமைதி மற்றும் மரியாதைக்கு அழைப்பு விடுக்கின்றனர்.

ஆதிக்கம் மற்றும் சுரண்டல் போன்ற தீமையில் வேரூன்றிய மனப்பான்மைகள், இயற்கை வளங்களைப் பதுக்குதல், தேசியவாதம், போர் மற்றும் செல்வாக்கை உருவாக்குதல் ஆகியவை பழைய உலகத்தை வடிவமைக்கின்றன,  இப்படிப்பட்ட தீமைகள் நிறைந்த உலகை இளையோர் நிராகரிக்கின்றனர். அதற்குக் காரணம், அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளுக்கு அங்கு இடமில்லாமல் போய்விடுகின்றன.

ஆகவே, இளையோரிடத்தில் ஆழிவுக்கான ஆயுதங்களை அல்ல, கல்விக்கான ஆயுதங்களைக் கொடுப்போம். அவர்களின் கேள்விகளுக்குப் பயப்படாமல், அவர்கள் சொல்வதைக் கேட்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களை மனதில் கொண்டு ஒரு உலகத்தைக் கட்டியெழுப்புவோம்.

விண்ணகத்தின் குழந்தைகளாகவும், நம்பிக்கையின் நெசவாளர்களாகவும், ஒற்றுமையின் கைவினைஞர்களாகவும், அமைதி மற்றும் ஒற்றுமையின் முன்னறிவிப்பாளர்களாகவும் பூமியில் ஒன்றிணைந்து நடப்போம்,  இந்தப் பாதையில் முன்னோக்கிச் செல்வோம்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2022, 15:15