உடன்பிறந்த உணர்வுநிலையில் வளர்வோம்!

நேர்மையான உரையாடல், மனித மாண்புக்கு மரியாதை, ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு ஆகியவை நம்மிடையே உருவாக்கட்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கஜகஸ்தான் தலைநகர் நூர்-சுல்தானில், செப்டம்பர் 14, புதனன்று நடைபெற்ற, உலகின் பெரிய மற்றும், பூர்வீக மதங்களின் தலைவர்களின் ஏழாவது மாநாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய உரை.

நம்மைக் கடந்து நம்மை ஈர்க்கும் எல்லையற்ற பரம்பொருளுக்கு முன், நாம் மிகச் சாதாரண உயிரினங்கள் என்பதை மதங்கள் நமக்கு நினைபடுத்துகின்றன. நாம்  எல்லாம் வல்லவர்கள் அல்ல, ஆனால் ஆண்களும் பெண்களுமாக ஒரே விண்ணக இலக்கை நோக்கிப் பயணிக்க அழைக்கப்படுகிறோம்.

நாம் அனைவரும் ஒன்றுகூடி வந்துள்ள இந்தக் கஜகஸ்தான் நிலம், மனித உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு புதிய பாதையை நமக்குத் திறக்கட்டும். நேர்மையான உரையாடல், மனித மாண்புக்கு மரியாதை, ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு ஆகியவற்றை நம்மிடையே உருவாக்கட்டும்.

நேற்று, டோம்ப்ரா இசைக்கருவி குறித்து எனது உரையில் குறிப்பிட்ட நான், இன்று அந்த இசைக்கருவிக்கு ஒரு குரலை இணைக்க விரும்புகிறேன்: நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கவிஞரும் அதன் நவீன இலக்கியத்தின் தந்தையும், கல்வியாளர் மற்றும் இசையமைப்பாளருமான அபாய் (Abai 1845-1904) என்னும் இக்கவிஞர் டோம்ப்ரா இசைக்கருவியுடன் இணைத்துச் சித்தரிக்கப்படுகிறார்.

‘ஒருவர் தன்னை ஆழமாக அறிந்துகொள்ளாத நிலையில், வாழ்கை அவருக்கு எப்படி அழகானதாக இருக்க முடியும்’ என்ற காலவரம்பற்ற ஒரு கேள்வி வழியாக நமக்குச் சவால் விடுகின்றார் கவிஞர் அபாய். அவ்வாறே, G. LEOPARDI என்ற மற்றறொரு கவிஞர், ‘எனது இந்தக் குறுகிய வாழ்வு என்னை எங்கே கொண்டு செல்லும்’ என்ற கேள்வியை எழுப்புகிறார்.

இது போன்ற கேள்விகள் மனிதகுலத்தின் மதத்திற்கான தேவையை சுட்டிக்காட்டுகின்றன. மேலும், இப்புவி வாழ்வுக்குரிய நலன்களை திருப்திப்படுத்தவோ அல்லது முற்றிலும் பொருளாதார உறவுகளை உருவாக்கவோ, வழிப்போக்கர்களாக வானத்தை நோக்கி கண்களை உயர்த்தி ஒன்றிணைந்து நடப்பதற்கோ, மனிதர்களாகிய நாம் உருவாக்கப்படவில்லை மாறாக, கவிஞர் அபாய் கூறுவதுபோன்று, உயிருள்ள ஆன்மாவும் தெளிவான மனமும் கொண்டு வாழ்வதற்கு நாம் அழைக்கப்படுகிறோம்  என்பதை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

உலக அமைதிக்கான தாகத்திற்கும், ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் இதயத்திலும் குடிகொண்டிருக்கும் எல்லையற்ற இறைவனின் தாகத்திற்கும் பதிலளிக்க, நமக்கு மதம் தேவைப்படுகின்றது. அவ்விதத்தில் மதச் சுதந்திரம் என்பது ஒரு அடிப்படையான, முதன்மையான மற்றும் பிரிக்க முடியாத உரிமையாக அமைகிறது. ஆகவே, ஒவ்வொரு நபரும் தனது மதத்தின் நம்பிக்கை மறையுண்மைகளை பிறர்மீது திணிக்காமல் அவைகளைப் பொதுவில் வெளிப்படுத்துவதற்கு உரிமையைப் பெறுகின்றனர்.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகில், மனிதகுலத்தின் ஆன்மீக மற்றும் சமூக வளர்ச்சியில் நாம் ஆற்ற வேண்டிய பங்கைப் பற்றி சிந்திக்க தற்போதைய இந்த மாநாடு நம்மை அழைக்கிறது. ஆகவே, கோவிட் 19 பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ள நான்கு சவால்களை நான் உங்களுக்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

முதலாவது சவாலாக அமைவது ‘வலுவின்மையும் பொறுப்புணர்வும்’ இந்நோய்த்தொற்றுக் காலங்களில் நாம் அனைவருமே பாதிக்கப்படக்கூடியவர்களாக உணர்ந்தோம். நம்மில் எவரும் முற்றிலும் யாரையும் சார்ந்திராதவர்களாகவோ, யாரும்  முற்றிலும் தன்னிறைவு பெற்றவர்களாகவோ இல்லை. மாறாக, நாம் ஒவ்வொருவரும் மற்றவரைச் சார்ந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. நம் அனைவருக்குமே உதவி தேவைப்பட்டது. ஆகவே, மதங்கள் இதுகுறித்து அலட்சியமாக இருக்கக்கூடாது: மாறாக, நமது மனித குடும்பத்தை மேலும் பிளவுபடுத்தும் ஆபத்தான மற்றும் கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஊக்குவிப்பிதற்கு அவைகள் அழைக்கப்படுகின்றன.

‘அமைதியை ஏற்படுத்தவேண்டும்’ என்பது இரண்டாவது சவாலாக அமைகிறது. கடந்த பல ஆண்டுகளாக இது குறித்துதான் அனைத்து மதங்களும் உரையாடல்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடத்தி வருகின்றன. போர் என்னும் கொடியத் தீமையினால் பகைமை, வெறுப்பு, குரோதம் போன்றவை ஏற்பட்டு, மனிதர் வாழ்வில் அமைதியை சீர்குலைத்துள்ளது.

கடவுள் அமைதியின் வடிவானவர். அவர் நம்மை எப்போதும் போரின் வழியில் அல்ல மாறாக, அமைதியின் வழியில் நடத்துகிறார். ஆகவே, சந்திப்பு, உரையாடல் மற்றும் பொறுமையான பேச்சுவார்த்தைகள் வழியாக அனைவரையும், குறிப்பாக இளம் மற்றும் வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு அமைதியின் பாதையில் முன்னேற்றத்தைக் கொணர்வோம். அபாய் கவிஞரும் இம்மாதிரியான வழிமுறைகளை மேற்கொள்ளவே நம்மைப் பணிக்கிறார்.

‘உடன்பிறந்த உணர்வுநிலை ஏற்பு’ என்பது மூன்றாவது சவாலாக அமைகிறது. மனிதரை ஏற்றுக்கொள்வது இன்று நமக்குக் கடினமாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் குழந்தைகள்,  புலம்பெயர்ந்தோர் மற்றும் வயதுமுதிர்ந்தோர் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில், போர், வறுமை, காலநிலை மாற்றம் மற்றும் நமது உலகமயமாக்கப்பட்ட உலகம் விளம்பரப்படுத்தும் செழுமைக்கான நாட்டம் ஆகியவற்றின் காரணமாக மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்து வருவதை நாம் காண்கிறோம்.

இந்த வாழ்க்கையில் மனிதரே ஒரு விருந்தினர்தான் என்கிறார் கவிஞர் அபாய். ஆகவே, விருந்தோம்பல், ஏற்றுக்கொள்ளுதல், பரிவிரக்கம் ஆகியவற்றின் உன்னத நிலையை நாம் மீண்டும் கண்டுபிடிப்போம். துன்புறுவோரின் துயரங்களை அறியாத, அவர்களின் நலன்களின்மீது அக்கறையும் பரிவிரக்கமும் கொள்ளாத நமது அலட்சிய நிலைகுறித்து வெட்கமுறுவோம். இந்தத் தன்னுணர்தல்தான் இரக்கத்தின் பாதையாக அமைவதுடன், நம்மை சிறந்த மனிதர்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும் மாற்றுகிறது என்பதை உணர்வோம்.

இறுதியாக, ‘நமது பொதுவான இல்லமாகிய இப்பூமிமீது நாம் கொள்ளவேண்டிய அக்கறை’ நான்காவது சவாலாக அமைகிறது. கவிஞர் அபாயும் கடவுள் எவ்வளவு ஒரு அழகான உலகத்தைப் படைத்தளித்துள்ளார்! என்று இறைவனைப் புகழ்கிறார். ஆகவே, தீவிர காலநிலை மாற்றங்களுக்கு எதிராக, நாம் இயற்கைச் சூழலைப் பேணிப்பாதுகாக்க வேண்டும். இதனால் இப்பூமி சிலரின் இலாப வெறிக்கு இரையாகிவிடாது, எதிர்காலச் சந்ததியினருக்காகவும், படைப்பாளரின் புகழுக்காகவும் பாதுகாக்கப்பட முடியும் என்பதை உணர்வோம்.

சுரண்டல் மனப்பான்மை, உண்மையில் நாம் வாழும் பொதுவான இல்லமாகிய இப்பூமியை அழித்துக்கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி, படைப்பாளரால் விரும்பப்படும் உலகின் மரியாதைக்குரிய மற்றும் மதப் பார்வையிக்கு எதிராகச் செல்லவும் வழிவகுக்கிறது. எனவே, ஒவ்வொரு வடிவத்திலும் உயிரின் பாதுகாப்பை ஊக்குவிப்பதும் மேம்படுத்துவதும் அவசியம் என்பதை உணர்வோம்.

செயற்கையான மற்றும் இணக்கமான ஒத்திசைவு வடிவங்களை நாம் ஒருபோதும் இலக்காகக் கொள்ளாமல், நமது சொந்த அடையாளங்களை உறுதியாகப் பேணுவோம். உடன்பிறந்த உணர்வுநிலை ஏற்படுவதற்கான பாதையாக நம் இதயங்களைத் திறப்போம். இப்படிச் செய்வதன் வழியாகத்தான்,  நாம் வாழும் இந்த இருண்ட காலங்களில், நம் படைப்பாளரின் ஒளியை நம்மால் ஒளிரச் செய்ய முடியும். அனைவருக்கும் நன்றி

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2022, 15:39