கூட்டுஒப்பந்தம்:நற்செய்தியின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புங்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
இவ்வுலகில் அனைத்து மக்களின் வாழ்வு வளம்பெற உதவும் ஓர் உலகளாவிய பொருளாதார அமைப்பை மேம்படுத்துவதற்கென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இளம் பொருளாதார நிபுணர்களும் இணைந்து கூட்டுஒப்பந்தம் ஒன்றில், அசிசி நகரில் செப்டம்பர் 24, இச்சனிக்கிழமையன்று கையெழுத்திட்டுள்ளனர்.
செப்டம்பர் 22, இவ்வியாழன் முதல் 24, இச்சனிக்கிழமை வரை, இத்தாலியின் அசிசி நகரில் நடைபெற்ற 'பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்' என்ற நிகழ்வின் வெளிப்பாடாக, கையெழுத்திடப்பட்டுள்ள இக்கூட்டு ஒப்பந்தம், நற்செய்தியின் அடிப்படையில் ஒரு பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அழைப்புவிடுக்கின்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான இளம் பொருளாதார நிபுணர்களின் சார்பாக, தாய்லாந்து நாட்டு இளம்பெண் Lily Ralyn Satidtanasarn அவர்கள், இக்கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
சிறந்த பொருளாதாரத்தை உருவாக்குதல்
இக்கூட்டு ஒப்பந்தத்தில், நம் தலைமுறைகள் மீதுள்ள பொறுப்பை ஏற்றுள்ள இளம் பொருளாதார நிபுணர்கள், இன்றைய மற்றும் நாளைய பொருளாதாரம், நற்செய்தியின் பொருளாதாரமாக மாறுவதற்கு தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தீர்மானித்துள்ளனர்.
கூட்டுஒப்பந்தம்
போரின் அல்ல, ஆனால் நட்அமைதியின் ஒரு பொருளாதாரம், இது ஆயுதப் பரவலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற, படைப்பைப் பாதுகாக்க உதவுகின்ற, மனிதர், குடும்பம், மற்றும் வாழ்வுக்குப் பணியாற்றுகின்ற பொருளாதாரமாகும்.
அனைவருக்கும் மாண்புள்ள வேலையை வழங்குகின்ற மற்றும் அனைவரையும் பாதுகாக்கின்ற, ஓர் உண்மையான பொருளாதாரத்தில் எவரும் ஒதுக்கப்பட்டுவிடக்கூடாது.
நிதி, உண்மையான பொருளாதாரம் மற்றும், தொழிலின் நண்பனாக மற்றும், நட்பாக மாறவேண்டும்.
மக்களின் விழுமியங்களும் கலாச்சாரங்களும் மதிக்கப்படவேண்டும், அதேநேரம், ஏழ்மை மற்றும், சமத்துவமின்மை குறைக்கப்படவேண்டும்
பொருளாதாரம், மனிதரின் நன்னெறிகளால் வழிநடத்தப்படவேண்டும், செல்வம் எல்லாருக்கும் உரியதாய் இருக்கவேண்டும்.
நாம் இந்த பொருளாதாரத்தில் நம்பிக்கை வைக்கின்றோம். இது ஒரு கற்பனை அல்ல, இத்தகைய பொருளாதாரத்தை நாம் ஏற்கனவே கட்டியெழுப்பிக்கொண்டிருக்கிறோம், நம்மில் சிலர், வாக்குறுதி நிலத்தின் தொடக்கமாக சுடர்விட்டுக்கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு இக்கூட்டுஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்