பேராசிரியர்கள் குழுவைச் சந்திக்கும் திருத்தந்தை பேராசிரியர்கள் குழுவைச் சந்திக்கும் திருத்தந்தை  

திறந்த மனதுடன் இறையியல் பயிலப்படுகிறது

திருவழிபாட்டுப் பணிகள் என்பது, கிறிஸ்து மற்றும் திருஅவையின் பணிகளாகும்: திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருவழிபாட்டு முறை பற்றிய ஆய்வு என்பது, இறைவேண்டல் மற்றும் கொண்டாடும் திருஅவையின் வாழ்க்கை அனுபவத்தால் ஊக்கமளிக்கப்பட வேண்டும், அப்போதுதான் வழிபாடு என்பது எப்போதும் உயிரோட்டமுள்ள அனுபவத்திலிருந்து ஊற்றெடுக்க முடியும் என்று தன்னை சந்திக்க வந்த பேராசிரியர்கள் குழு ஒன்றிடம் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐம்பதாம் ஆண்டைச் சிறப்பிக்கும் வழிபாட்டு முறை பேராசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின்  அமைப்பினரை செப்டம்பர் 1, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

வழிபாட்டுப் பணிகளில் மேற்கொண்டுள்ள அவர்களின் ஆய்வும், ஆராய்ச்சிப் பணிகளும் சிறப்பாக அமைந்துள்ளன என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்துடன் அவர்களின் பணி தொடரும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

வழிபாட்டு பணிகள் என்பது கிறிஸ்து மற்றும் திருஅவையின் பணிகளாகும் என்றும், இது தாவரத்தைப் போன்ற ஓர் உயிரினமாக இருப்பதால், அதைப் புறக்கணிக்கவோ அல்லது தவறாக நடத்தவோ முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அதனை மிகவும் கவனமாக வளர்க்கவேண்டும் என்றும் விளக்கியுள்ளார்.

இன்றையச் சூழலில் திருவழிபாடு பற்றிய ஓர் உயர்ந்த கண்ணோட்டம் நமக்குத்தேவை என்றும், அதாவது, இவ்வுலகம் அல்ல மாறாக, விண்ணகமே நமது உண்மையான உலகம் என்பதை வழிபாடு நமக்கு உணரவைக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வழிபாட்டு முறை என்பது, மக்களின் வாழ்வை மையப்படுத்தியதாக இருக்கவேண்டுமே தவிர அது மக்களைவிட்டு வெகு தொலைவிற்குச் சென்றுவிடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2022, 15:00