திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பருடன்  Mikhail Gorbachev திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பருடன் Mikhail Gorbachev 

Gorbachev-வின் மரணத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் இரங்கல்

நாட்டில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்ட நேரத்தில், தன்னை முழுவதுமாக அர்ப்பணித்தவர் Mikhail Gorbachev

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் உடன்பிறந்த உணர்வு மற்றும் சொந்த நாட்டின் முன்னேற்றத்திற்கான அவரது தொலைநோக்கு அர்ப்பணிப்பை, திருஅவை நன்றியுடன் நினைவுகூருகின்றது என்று சோவியத் ஒன்றியத்தின் கடைசி அரசுத் தலைவரான Mikhail Gorbachev-வின் இறப்பைக் குறித்து தான் அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 30, இச்செவ்வாயன்று மாஸ்கோவில் மருத்துவமனை ஒன்றில் 91 வயது நிரம்பிய Gorbachev அவர்கள் மரணமடைந்தார். அவரது இறப்பைமுன்னிட்டு அனுப்பியுள்ள தந்திச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நன்மைத்தனமும் இரக்கமும்கொண்ட கடவுளிடமிருந்து அவரது ஆன்மாவுக்கு நிறையமைதி கிடைக்க, தான் இறைவேண்டல் செய்வதாகக் கூறியுள்ளார்.

இத்துயரமான நேரத்தில், Gorbachev-வின் குடும்ப உறுப்பினர்கள், மற்றும் அவரை ஒரு மதிப்பிற்குரிய அரசியல்வாதியாக கண்டுகொண்ட அனைவருடனும் தனது ஆன்மிக நெருக்கத்தை வெளிப்படுத்துவதாகவும் அத்தந்திச் செய்தியில் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒரு சிறந்த சீர்திருத்தவாதியான Gorbachev, வேற்றுமை என்னும் இரும்புத் திரையை அகற்றி, சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்கு வழிவகுத்ததோடு, பல ஆண்டுகளாக நிகழ்ந்துவந்த கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிரான பல்வேறு மதத் துன்புறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, திருப்பீடத்துடனான உறவுகளில் ஒரு புதிய போக்கை உருவாக்கியவர் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1991-இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுவதற்கு முன்பு அதன் கடைசித் தலைவராக இருந்த Gorbachev அவர்கள், அமைதிக்கான நொபெல் பரிசு பெற்றவர். ஐம்பதுகளின் தொடக்கத்திலிருந்து சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும், 1985 முதல் 1991 வரை அதன் பொதுச் செயலாளராகவும், 1990 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் அதிபராகவும் இருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 September 2022, 14:56