அலெஸ்ஸாந்திரியா,ஸ்போலேத்தோ  கத்தோலிக்கர் சந்திப்பு அலெஸ்ஸாந்திரியா,ஸ்போலேத்தோ கத்தோலிக்கர் சந்திப்பு  

திருத்தந்தை புனித 5ம் பயஸ், திருவழிபாட்டின் சீர்திருத்தவாதி

திருத்தந்தை புனித 5ம் பயஸ் அவர்கள் இறைபதம் சேர்ந்ததன் 450ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அலெஸ்ஸாந்திரியா மறைமாவட்ட கத்தோலிக்கர் திருத்தந்தையை சந்தித்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான்

மறைமாவட்ட அளவில் நடைபெறும் மேய்ப்புப்பணி புதுப்பித்தலில் ஒன்றிணைந்து செயல்படுமாறு, இத்தாலியின் அலெஸ்ஸாந்திரியா மறைமாவட்ட கத்தோலிக்கரிடம் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இம்மறைமாவட்டத்தின் Bosco Marengo என்ற ஊரில் பிறந்த திருத்தந்தை புனித 5ம் பயஸ் அவர்கள் இறைபதம் சேர்ந்ததன் 450ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அம்மறைமாவட்ட கத்தோலிக்கர் மற்றும், உறுதிபூசுதல் அருளடையாளத்தைப் பெறுகின்ற Spoleto-Norcia மறைமாவட்டத்தின் சிறார் என ஏறத்தாழ 1,500 பேரை செப்டம்பர் 17, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானின் திருத்தந்தை 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.       

திருத்தந்தை புனித 5ம் பயஸ் அவர்கள், தனது ஆறு வருட தலைமைப் பணியில், துணிச்சலோடு தெரிவுசெய்வதில் திருஅவையின் சீர்திருத்தவாதியாக விளங்கினார் எனவும், அவர் கொணர்ந்த சீர்திருத்தங்களுக்குப்பின், திருஅவையின் நிர்வாக முறை மாறியது எனவும் உரைத்த திருத்தந்தை, அத்திருத்தந்தையின் போதனைகள் மற்றும், சான்றுவாழ்வை உள்வாங்குவதன் வழியாக அவர் பற்றிய நினைவுகளில் நிலைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அத்திருத்தந்தையின் போதனைகளை இக்காலத்திற்கேற்ப விளக்கும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவை, உண்மையைத் தேடுகின்றவர்களாக வாழ நம்மை அழைக்கின்றது என்றும், அவ்வுண்மை இயேசுவே என்றும், திருஅவை, மற்றும், கிறிஸ்தவ சமூகங்களின் அன்றாட வாழ்வில் அவ்வுண்மைக்குச் சான்றுகளாக வாழவேண்டிய சவாலை எதிர்கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார். 

திருத்தந்தை புனித 5ம் பயஸ் அவர்கள், திருஅவையின் திருவழிபாட்டில் சீர்திருத்தம் கொணர உழைத்தார் என்றும், நான்கு நூற்றாண்டுகளுக்குப்பின் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், இன்றைய உலகுக்கு ஏற்ற முறையில் அதில் மேலும் சீர்திருத்தத்தை மேற்கொண்டது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, திருநற்கருணை கொண்டாட்டம் குழும வாழ்வின் ஊற்றாக மாறுவதை உறுதிசெய்வதற்கு அண்மை ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டார்.

திருத்தந்தை புனித 5ம் பயஸ் அவர்கள், செபத்திற்கு, குறிப்பாக, செபமாலை செபிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை நம்மால் மறக்க இயலாது என்றும், உலகில் திருஅவை செபத்திற்கே முன்னுரிமை கொடுக்கின்றது என்றும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அலெஸ்ஸாந்திரியா மறைமாவட்டம் தொடங்கியுள்ள ஒருங்கிணைந்த பயணம் என்ற நடவடிக்கை, ஆயர், அருள்பணியாளர்கள் மற்றும், பொதுநிலையினர்க்கிடையே குழும உறவில் உடன்பிறந்த உணர்வு தொடர்ந்து பலனளிக்கவேண்டும் என்ற தன் ஆவலையும் திருத்தந்தை வெளியிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2022, 15:26