அர்ஜென்டினா திருப்பயணிகளுக்குத் திருத்தந்தையின் காணொளிச் செய்தி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
உங்களின் திருப்பயணம் நம்பிக்கையின் திருப்பயணமாகவும், சாட்சிய வாழ்வின் திருப்பயணமாகவும் அமையட்டும் என்று அர்ஜென்டினாவின் திருப்பயணிகளுக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியொன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டினாவின் Luhan நகரிலுள்ள புனித கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாடுதழுவிய திருப்பயணத்தில் பங்கேற்கவிருக்கும் Los Hogares de Cristo என்ற குழுவுக்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Los Hogares de Cristo திருப்பயணக் குழுவின் கடந்த பதினைந்து ஆண்டுகால பணிகளையும் சாட்சிய வாழ்வையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தத் திருப்பயணம் ஆக்கப்பூர்வமானதாக அமைத்துள்ளது என்றும் விவரித்துள்ளார்.
மேலும், இத்திருப்பயணம் உயிர்களை அழிக்கும் போதைப்பொருள் குற்றத்திற்கு எதிரான ஒரு நம்பிக்கையாக அமைகிறது என்றும், இது நல்வாழ்விற்கான ஒரு மாற்றுப் பாதையைத் திறக்க முடியும் என்றும் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்கான ஒரு நல்ல நேரமும் கனிந்து வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவ்விதத்தில் பார்க்கும்போது, Los Hogares de Cristo அமைப்பு, உயர்த்தும் கரம் மட்டுமல்ல, மாறாக, பாசத்தின் கரமாகவும் விளங்குகிறது என்று தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நீங்களே உங்களைக் கட்டியெழுப்பும் ஒரு இல்லமாக விளங்குவீர்கள் என்றும், உங்கள் வாழ்க்கை வலிமையூட்டப்பட்டதாக விளங்கும் என்றும் வாழத்தியுள்ளார்.
15-வது ஆண்டாகத் தனது திருப்பயணத்தைத் தொடங்கும் Los Hogares de Cristo அமைப்புக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணத்தின்போது வழியில் ஏற்படும் பல்வேறு சிரமங்களின் மத்தியில், மனம் தளர்ந்துவிடாமல் உங்கள் பயணத்தை தொடருங்கள் என்றும் அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 4, இஞ்ஞாயிறன்று, தொடங்கப்பட்ட இத்திருப்பயணம், Familia Grande Hogar de Cristo, அர்ஜென்டினா காரித்தாஸ் மற்றும் பங்குத்தளங்களின் பல்வேறு அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்