3வது உலக மறைக்கல்வி மாநாட்டில் பங்குபெறும் ஆசிரியர்கள் 3வது உலக மறைக்கல்வி மாநாட்டில் பங்குபெறும் ஆசிரியர்கள் 

நம்பிக்கை வாழ்வால் கிடைக்கும் அனுபவத்தைப் பகிருங்கள்

ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் ஆண்டவரின் நற்செய்தியை எதிரொலிக்கச் செய்ய அவர் நம்மை அழைத்திருக்கிறார் - மறைக்கல்வி ஆசிரியர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

இயேசு கிறிஸ்துவின் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்த தாங்கள் அழைக்கப்பட்டுள்ளதை நினைவில் இருத்தி, நம்பிக்கை வாழ்வால் கிடைக்கும் அனுபவத்தை மற்றவரோடு பகிர்ந்துகொள்ளுமாறு, பன்னாட்டு மறைக்கல்வி ஆசிரியர்களிடம் செப்டம்பர் 10, இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மூன்றாவது உலக மறைக்கல்வி மாநாட்டில் பங்குபெறுகின்ற ஏறத்தாழ 1,400 பேரை வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, பன்மைத்தன்மைகொண்ட இப்பிரதிநிதிகளைப் பார்க்கையில் மகிழ்ச்சியளிக்கின்றது என்று கூறியுள்ளார்.

திருஅவையில் மறைக்கல்வி ஆசிரியர்களின் மிக முக்கிய பங்கை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கைப் பயணத்தை மேற்கொள்கின்ற சிறார், இளையோர், வயதுவந்தோர் என பலருக்கு திருஅவை கொண்டிருக்கும் பொறுப்பின் ஓர் அடையாளமாக இவர்கள் உள்ளனர் என்றும், கிறிஸ்தவ சமுதாயத்தில் இவர்கள் கொண்டிருக்கும் பெரிய பங்கை அறிந்து, மறைக்கல்வி திருப்பணி அமைப்பை உருவாக்கியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார் உட்பட மறைக்கல்வி ஆசிரியர்களாக இந்நிகழ்வில் பங்குபெறும் எல்லாரையும் வாழ்த்துவதாகத் தெரிவித்துள்ள திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரின் இதயத்திலும் ஆண்டவரின் நற்செய்தியை எதிரொலிக்கச் செய்ய அவர் நம்மை அழைத்திருக்கிறார் எனவும் எடுத்துரைத்தார்.  

வேதியர்களாக இருப்பதில் சோர்வடையவேண்டாம்

பன்னாட்டு மறைக்கல்வி ஆசிரியர்கள் சந்திப்பு
பன்னாட்டு மறைக்கல்வி ஆசிரியர்கள் சந்திப்பு

பள்ளியில் பாடம் நடத்துவதுபோன்று மறைக்கல்வி வகுப்புகளை எடுக்காமல், அக்கல்வியில் நம்பிக்கை வாழ்வின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுமாறு  மறைக்கல்வி ஆசிரியர்களிடம் கூறியத் திருத்தந்தை, பல்வேறு வயதினர் மற்றும், வாழ்வுமுறையைக் கொண்டிருப்போருக்கு நம்பிக்கையை வழங்க சிறந்த வழிகளைக் காண்பதை மறைக்கல்வி உள்ளடக்கி இருப்பதால், இக்காலத்தில் அது சவாலான ஒன்று எனவும் கூறியுள்ளார்.

இயேசு கிறிஸ்துவுக்குச் சான்றுகளாய் விளங்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, மறைக்கல்வியின் நோக்கத்தையும் சுட்டிக்காட்டி உரையாற்றியதோடு, இந்த ஆசிரியர்களின் பணிகளுக்கு நன்றி தெரிவித்து அவர்களின் பணியை ஊக்கப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2022, 15:08