நம் இதயங்கள் காழ்ப்புணர்விலிருந்து விடுவிக்கப்படவேண்டும்.
மேரி தெரேசா: வத்திக்கான்
உலகின் பல பகுதிகளில் இடம்பெறும் போர்களை மூன்றாம் உலகப் போர் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி அழைத்துவரும்வேளை, அப்போருக்குரிய காரணங்கள் பற்றிய தன் சிந்தனைகளை, கஜகஸ்தான் திருத்தூதுப் பயணத்தின்போது இயேசு சபையினரிடம் பகிர்ந்துகொண்டதை, அச்சபையின் “La Civiltà Cattolica” இதழ் செப்டம்பர் 29, இவ்வியாழனன்று பிரசுரித்துள்ளது.
இம்மாதம் 15ம் தேதியன்று, இரஷ்ய இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்த 19 பேருடன், கஜகஸ்தான் நாட்டின் நூர்-சுல்தான் திருப்பீடத் தூதரகத்தில் உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் இதயங்கள் காழ்ப்புணர்விலிருந்து விடுதலைபெறவேண்டும் என்று கூறியுள்ளார்.
நல்ல, தீய மனிதர்களுக்கிடையே போர் அல்ல
போரினால் துன்புறுவோர் அப்பாவி மக்கள் என்றும், அது, வெறுப்புணர்வைப் பிறப்பிக்கிறது என்றும், போரைத் தொடுப்பவர்கள், மனித சமுதாயத்தை மறந்து விடுகின்றனர் என்றும் உரைத்த திருத்தந்தை, cowboy திரைப்படத்தில் வருகின்ற, நல்ல மற்றும் கெட்ட மனிதர் பற்றி நினைப்பது சரியல்ல என நான் நினைக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆயினும் இப்போது உலகில் நடப்பது ஓர் உலகப் போர் என்பதில் சந்தேகமே இல்லை என்றும், போருக்கு இட்டுச்செல்லும் அடிப்படை காரணங்களைக் கண்டறியவேண்டிய தேவை உள்ளது என்றும் கூறியுள்ள திருத்தந்தை, போரைத் தொடுக்கத் தூண்டும் பன்னாட்டு காரணிகள் குறித்து முதலில் குறிப்பிட்டுள்ளார்.
போரில் அதிகாரம், ஆதிக்கத்தன்மைகள்
பேரரசாகிய இரஷ்யாவின் மக்கள், தங்களின் எல்லைகள் குறித்து பாதுகாப்பற்ற அச்சத்தில் உள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளாமல், NATO படைகள், இரஷ்ய எல்லைகளுக்கு அருகில் இராணுவத்தை நிறுத்தியது குறித்து, உக்ரைனில் போர் தொடங்கியவுடனே, 2021ஆம் ஆண்டு டிசம்பரில் வத்திக்கானில் நடந்த கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தப் போருக்குரிய காரணத்தை எளிதாகக் கூறிவிடமுடியாது என்றும், இதில் அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தைக் காண முடிகின்றது என்றும், அச்சுறுத்தப்படுவதாக தாங்கள் உணர்கையில், போரைத் தொடங்குவதே தீர்வு என, அதிகாரத்திலும் ஆதிக்கத்திலும் இருப்பவர்கள் செயல்படுகிறார்கள் எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
உக்ரைனுக்குச் செல்வது இது சரியான நேரமல்ல
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரை நிறுத்துவதற்கு, இதுவரை தான் மேற்கொண்டுள்ள அனைத்து முயற்சிகளையும் எடுத்துரைத்த திருத்தந்தை, உக்ரைனுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு இது சரியான நேரமல்ல என்றும், போரினால் அப்பாவி மக்களே பெரிதும் துன்புறுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
தவறாகப் புரிந்துகொள்ளப்படுகையில் சினம்கொள்வதில்லை
புடினுக்குத் தெரிந்த ஒருவரின் மகள் Darya Dugina தாக்கப்பட்டது தொடர்பாக திருத்தந்தைக்கு எதிராக எழுந்த புகார்கள் குறித்தும் இயேசு சபையினரிடம் கூறிய திருத்தந்தை, தான் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகையில் சினம்கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இயேசு சபையினரின் மறைப்பணி பற்றிப் பேசியபோது, அச்சபையினர் தனக்காகப் பரிந்துபேசவேண்டும் என்பதில் தனக்கு ஆர்வமில்லை எனவும், கடவுளின் பாணியில் நாம் மக்களுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் என்பதையே விரும்புகிறேன் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்