அன்னை தெரேசாவின் புன்னகையை இதயங்களில் கொண்டிருப்போம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
கொல்கத்தா புனித அன்னை தெரேசாவின் நினைவு நாள், பிறரன்பு உலக நாள் ஆகிய இரு முக்கிய நாள்களை மையப்படுத்தி, செப்டம்பர் 05, இத்திங்களன்று, தன் டுவிட்டர் பக்கத்தில் இரு குறுஞ்செய்திகளை, வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்னை தெரேசா (#MotherTeresa) என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்டுள்ள முதல் டுவிட்டர் செய்தியில், “அவர்களின் மொழியை நான் பேசாதிருக்கலாம், ஆனால் என்னால் புன்னகைக்க முடியும் என, அன்னை தெரேசா கூறுவதில் மிகவும் மகிழ்வார். அவ்வன்னையின் புன்னகையை நம் இதயங்களில் கொண்டிருப்போம், மற்றும் அதனை, நம் பயணத்தில் சந்திப்பவர்களுக்கு, குறிப்பாக, துன்புறுவோருக்கு அளிப்போம். இவ்வாறு, மகிழ்வு மற்றும், நம்பிக்கையின் வாய்ப்புக்களை நாம் திறப்போம்” என்ற சொற்கள் பதிவாகியிருந்தன.
பிறரன்பு உலக நாள்
செப்டம்பர் 05, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்ட, பிறரன்பு உலக நாளை மையப்படுத்தி திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “ஒரு சிறிய அளவையும் அன்போடு பகிர்ந்துகொண்டால், அது ஒருபோதும் முடிவுறாது, மாறாக, அது, வாழ்வு மற்றும், மகிழ்வின் ஊற்றாக மாறும். நாம் வழங்கும் தர்மங்கள், சிறியவையோ பெரியவையோ எதுவானாலும், அவற்றை மகிழ்வு மற்றும், எளிமையோடு வழங்கும்போது, அவை இவ்வாறு மாறும்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.
கொல்கத்தா புனித அன்னை தெரேசா அவர்கள், 45 ஆண்டுகளாக ஏழைகள் மற்றும், துன்புறுவோருக்கு ஆற்றிய அரும்பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, அவர் இறைபதம் (1997) சேர்ந்த செப்டம்பர் 5ம் நாளை, ஐ.நா. பொது அவை 2012ஆம் ஆண்டில் பிறரன்பு உலக நாளாக அறிவித்தது. செப்டம்பர் 05, இத்திங்களன்று புனித அன்னை தெரேசா இறைபதம் அடைந்த 25ம் ஆண்டு நினைவுகூரப்பட்டது.
சந்திப்புகள்
அர்ஜென்டீனா நாட்டு யூத-முஸ்லிம் தோழமை அமைப்பின் நான்கு பிரதிநிதிகள், துறவியர் பேராயத் தலைவர் கர்தினால் João Braz de Aviz, பிரான்ஸ் நாட்டு Solesmesன் Pierre துறவு இல்ல தலைவர் Frère Geoffroy Kemlin ஆகியோரை, செப்டம்பர் 05, இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்துக்கான போலந்து நாட்டுத் தூதர் Adam Mariusz Kwiatkowski அவர்களையும், இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து பணி நியமன நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், தன் பணிக்காலத்தை முடிக்கும் திருப்பீடத்துக்கான ஈரான் நாட்டுத் தூதர் Seyed Taha Hashemi அவர்களும் இத்திங்களன்று திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்து தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்