திருத்தந்தையின் கஜகஸ்தான் இறுதிநாள் பயணத் துவக்கம்

கஜகஸ்தான் திருஅவை ஒரு பெருமறைமாவட்டத்தையும், இரண்டு மறைமாவட்டங்களையும், ஓர் அப்போஸ்தலிக்க நிர்வாகத்தையும் கொண்டு, செயல்பட்டுவருகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கஜகஸ்தான் நாட்டிற்கான திருத்தந்தையின் திருப்பயண இறுதி நாள் நிகழ்வுகள் செப்டம்பர் 15, புதன், வியாகுல அன்னை திருவிழாவன்று காலையில் நூர்-சுல்தான் நகரின் திருப்பீடத்துதரகத்திலிருந்து துவங்கின. காலை உள்ளூர் நேரம் ஏழுமணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம் 6.30 மணிக்குத் தனியாகத் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காலை உணவை அருந்தியபின் அந்த தூதரகத்திலேயே, அந்நாட்டில் பணியாற்றும்  இயேசு சபையினரைச் சந்தித்து ஏறத்தாழ ஒருமணி நேராம் உரையாடினார். அதன்பின் உள்ளூர் நேரம் 10 மணி 10 நிமிடங்களுக்கு 4.3 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சகாய அன்னை பேராலயம் நோக்கி காரில் பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ். அஸ்தானா உயர் மறைமாவட்டத்தின் பேராலயமான இங்கு, ஆயர்கள் அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், அருள்பணி பயிற்சி பெறுவோர், துறவறத்தார் என அனைவரும் காத்திருக்க, உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு அப்பேராலயம் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வாசலிலேயே மூன்று குழந்தைகள் மலர் கொடுத்து வரவேற்றன. ஒரு குடும்பம் பாரம்பரியப் பாடல் ஒன்றைப் பாடி, அந்த வரவேற்பு நிகழ்ச்சியை மேலும் மெருகூட்ட, கோவிலின் உள்முகப்பு வரை திருத்தந்தை சென்றடையும்வரை, அங்குக் குழுமியிருந்தோர் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். இச்சந்திப்பின்போது, கஜகஸ்தான் நாட்டின் Almaty மறைமாவட்ட ஆயரும், மத்திய ஆசிய ஆயர் பேரவையின் தலைவருமான ஆயர் José Luís Mumbiela Sierra அவர்கள் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். கஜகஸ்தான் திருஅவை ஒரு பெருமறைமாவட்டத்தையும், இரண்டு மறைமாவட்டங்களையும், ஓர் அப்போஸ்தலிக்க நிர்வாகத்தையும் கொண்டு, அதாவது, அஸ்தானா(நூர்-சுல்தான்), Almaty, Karaganda, Atyrau என நான்கு நிர்வாக அமைப்புக்களைக் கொண்டு செயல்பட்டுவருகின்றது. 

Almaty மறைமாவட்ட ஆயரின் வரவேற்புரைக்குப்பின் புனித பவுல் எபேசியருக்கு எழுதிய திருமடலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஓர் அருள்பணியாளர், ஓர் அருள்கன்னியர், கிரேக்க கத்தோலிக்க திருஅவையின் விசுவாசி ஒருவர், மறைப்பணியாளர் ஒருவர் என நான்குபேர் தங்கள் சான்று வாழ்வை அனைவருடனும் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் சான்று வாழ்வு பகிர்வுக்குச் செவிமடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கருத்துக்களையும் இங்குப் பகிர்ந்து கொண்டார்.

திருத்தந்தையின் இவ்வுரைக்குப்பின் அனைவரும் இணைந்து அமைதியின் அரசியாம் அன்ன மரியாவிடம் தங்களை அர்ப்பணிக்கும் செபம் ஒன்றைச் செபித்தனர். அதன்பின் இலத்தின் மொழியில் 'விண்ணிலுள்ள எங்கள் தந்தையே' என்ற செபத்தை பாட, திருத்தந்தையும் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

மத்திய ஆசிய ஆயர் பேரவை என்பது, கஜகஸ்தான், கிர்கிஜிஸ்தான், தாஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், மங்கோலியா, மற்றும் ஆப்கானிஸ்தான் ஆயர் பேரவைகளை உள்ளடக்கியது. இந்நாடுகளின் திருஅவைப் பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்த ஆயர் பிரதிகளுடன் ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்தச் சந்திப்பை முடித்து, 4.3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்பீடத்தூதரகம் சென்று மதிய உணவருந்தி சிறிது ஓய்வும் எடுத்துக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 September 2022, 14:53