திருத்தந்தையின் 38வது திருத்தூதுப் பயணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
போர் என்பது மனிதனின் கண்டுபிடிப்பு, அதன் விதைகளை விதைத்தவன் அறுவடையும் செய்கிறான். ஆனால் அமைதியின் பாலங்களைக் கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. போரின் கருவிகளைக் கைவிட்டு, அமைதியின் புன்னகையைத் தாங்குவோம், போரில் மனித இரத்தமும், அமைதியில் நன்மைத்தனங்களும் பெருக்கெடுத்து ஓடும். மனதில் உருவெடுக்கும் போர் நிலத்தில் சென்று முடிவடைகின்றது. உள்ளத்தில் உருவாகும் அமைதியோ நம்மைச் சுற்றி விதைக்கப்படுகிறது. பகைமையில் உருவான கொடிய நஞ்சு, போர். நம் தலைவிதியை மாற்றும் வல்லமையுடைய அமுதமே அமைதி. போர் மனிதனின் மிகப்பெரும் மூடத்தனம் என்றால், அமைதியோ அவனின் மிக உன்னத மகிழ்ச்சி என்று கவிதை வடிவில் கூறியிருப்பவர் மதன் காந்தி. ஆம், இன்றைய உலகுக்கு பொருத்தமான பாடல் இது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடிக் கூறுவதுபோல், மூன்றாம் உலகப்போர் துண்டு துண்டாக உலகில் பல பகுதிகளில் நடந்து வருகிறது. இத்தகைய ஒரு பின்னணியில் கஜகஸ்தான் நாட்டில் இடம்பெறும் ஏழாவது உலகப் பெரிய, மற்றும் பூர்வீக மதங்களின் கருத்தரங்கில் பங்குகொள்ளச் சென்றுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பின்னான இவ்வேளையில், மனித குலத்தின் சமுதாய மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கு மதங்கள் என்னச் செய்ய முடியும் என்பது குறித்து விவாதிக்கவே, ஏறக்குறைய 100 நாடுகளின் மதத்தலைவர்கள் கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர்-சுல்தானில் கூடியுள்ளனர்.
செப்டம்பர் 13ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, காலை கஜகஸ்தான் நாட்டிற்குத் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு திருப்பயணத்திற்கு முன்னரும் பின்னரும் உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று இறைவேண்டல் செய்யும் வழக்கத்தின்படியே, இத்திங்கள் செப்டம்பர் 12ம் தேதி மாலை, அக்கோவிலுக்குச் சென்று, அங்கு வைக்கப்பட்டிருக்கும் Maria Salus Populi என்ற அன்னை மரியாவின் திரு உருவம் முன் செபித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்