முதன்மை வானதூதர்கள் மிக்கேல், இரபேல், மற்றும் கபிரியேல் முதன்மை வானதூதர்கள் மிக்கேல், இரபேல், மற்றும் கபிரியேல்  

முதன்மைத் தூதர்களின் பாதுகாவலில் நம்மை அர்ப்பணிப்போம்.

உணவு வீணாக்கப்படாமல், நியாயமாய் பகிர்ந்துகொள்ளப்படும்போது, தேவையில் இருக்கும் எவருமே இல்லாதவர் என்ற நிலைக்கு உட்படமாட்டார்கள் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

தீயவனின் சோதனைகளுக்கு எதிரான போராட்டத்தில் நம்மைப் பாதுகாக்குமாறு முதன்மை வானதூதர்கள் மிக்கேல், இரபேல், மற்றும் கபிரியேலின் பாதுகாவலில் நம்மை இன்று அர்ப்பணிப்போம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

முதன்மை வானதூதர்கள் மிக்கேல், இரபேல், மற்றும் கபிரியேல் ஆகியோரின் திருநாளாகிய செப்டம்பர் 29, இவ்வியாழனன்று அத்தூதர்களை மையப்படுத்தி முதல் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை, அத்தூதர்கள், நற்செய்தியைக் கொணர நமக்கு உதவுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வுப் பயணத்தில் கடவுளின் மீட்பளிக்கும் திட்டத்தில் நாம் ஒத்துழைப்பு வழங்கும்வண்ணம், அத்தூதர்கள் நம்மை தம் கரங்களில் தாங்கிக்கொள்கிறார்கள் எனவும் திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

முதன்மைத் தூதர் மிக்கேல், வத்திக்கான் நாட்டின் பாதுகாவலர், மற்றும், முதன்மைத் தூதர் கபிரியேல், வத்திக்கான் வானொலியின் பாதுகாவலர் ஆவார்கள்.

2வது டுவிட்டர்

மேலும், செப்டம்பர் 29, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உணவு வீணாக்கப்படுவது குறித்த உலக நாளை (FLWDay) மையப்படுத்தி, திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், பெருந்திரளான மக்களுக்கு உணவளித்த இயேசு (லூக்.9:10-17), எதையும் வீணாக்கவேண்டாம் என்று தம் சீடர்களைக் கேட்டுக்கொண்டார் எனக் கூறியுள்ளார்.

உணவு வீணாக்கப்படாமல், நியாயமாய் பகிர்ந்துகொள்ளப்படும்போது, தேவையில் இருக்கும் எவருமே இல்லாதவர்களாக இருக்கமாட்டார்கள், மற்றும், சமுதாயமும், தன் ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

மேலும், அத் லிமினா சந்திப்பையொட்டி, இவ்வியாழனன்று பிரேசில் நாட்டு ஆயர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2022, 14:29