திருத்தந்தை புனித 23ம் யோவா திருத்தந்தை புனித 23ம் யோவா 

திருத்தந்தை புனித 23ம் யோவான்: அக்.12,1962ல் அமைதிக்காக அழைப்பு

உண்மை, நீதி, மற்றும், பிறரன்பின் செய்தியை, ஊக்குவிப்பது, திருஅவை, மற்றும், கிறிஸ்தவத்தின் அறநெறிசார் கடமை - திருத்தந்தை புனித 23ம் யோவான்

மேரி தெரேசா: வத்திக்கான்

1962ஆம் ஆண்டு அக்டோபரில் கியூப ஏவுகணை நெருக்கடி இடம்பெற்றசூழலில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கிய இரண்டாவது நாளான அம்மாதம் 12ம் தேதி, திருப்பீடத்தின் தூதர்களாகப் பணியாற்றுவோருக்கு ஆற்றிய உரையில், அமைதிக்காக உலகின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வேதனையோடு எழும்பும் அழுகுரல்களுக்கு நாடுகளின் தலைவர்கள் செவிமடுக்குமாறு வலியுறுத்திக் கூறினார்,  திருத்தந்தை புனித 23ம் யோவான்.

நாடுகளின் தலைவிதிக்கு, அந்நாடுகளின் தலைவர்களே பொறுப்பு என்பதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை 23ம் யோவான் அவர்கள், உலகில் அமைதி நிலவ நாடுகளின் தலைவர்கள் உழைக்கவேண்டும் என்று மிகுந்த உருக்கத்தோடு விண்ணப்பித்தார்.

1962ஆம் ஆண்டு அக்டோபரில் இடம்பெற்ற உலகளாவிய அரசியல் நெருக்கடிகள், பல வழிகளில் தற்போது நாம் வாழ்ந்துவரும் நெருக்கடியான சூழல் போன்று இருந்தவேளை,  கர்தினால்கள், ஆயர்கள், பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் உரோம் நகரில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்துகொண்டனர்.

முன்னாள் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே பனிப்போர் இடம்பெற்றபோது, கியூபா, சோவியத் யூனியனோடு அணிசேர்ந்ததன் காரணமாக, சோவியத் யூனியன், கியூபாவில் ஏவுகணையை நிறுவியதை, அமெரிக்க ஐக்கிய நாடு 1962ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி புகைப்படம் எடுத்தது. அதைத்தொடர்ந்து,  உலகில் பதட்டநிலைகள் அதிகமாயின.  

திருத்தந்தை 23 ஆம் யோவான் அவர்களின் திரு உருவத்தின் முன் திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை 23 ஆம் யோவான் அவர்களின் திரு உருவத்தின் முன் திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், சோவியத் யூனியனில் இருந்த கத்தோலிக்கரல்லாத மக்களோடு ஏற்கனவே உரையாடலைத் தொடங்கி, உலகின் அமைதிக்காக மிகச்சிறப்பான முயற்சியில் ஈடுபட்டிருந்தார், எனவே, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கிய இரண்டாவது நாளில், திருப்பீடத்தின் தூதர்களாகப் பணியாற்றுவோரிடம், அமைதிக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் புறக்கணிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், இப்பொதுச்சங்கம், மக்களின் வாழ்வு மீது அக்கறைகொள்ளும் சமூகக்கூறையும் கொண்டிருக்கிறது என்பதை, உங்களின் இருப்பு தெளிவாக வெளிப்படுத்துகிறது எனவும், அத்தூதர்களிடம் கூறினார், திருத்தந்தை புனித 23ம் யோவான்.

கத்தோலிக்கத் திருஅவையின் ஆன்மிக மறைப்பணியை வலியுறுத்தவும், நற்செய்தியின்  போதனைகளை சிறப்பாக வாழ்ந்துகாட்டவும், ஒன்றிப்பு மற்றும், அமைதிக்கான தாகத்தை ஊக்கப்படுத்தவுமென, பொதுச்சங்கம், முதலில் கத்தோலிக்கத் திருஅவை மீது அக்கறை கொண்டிருக்கிறது என்பதையும் திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், அத்தூதர்களிடம் கூறினார்.

உண்மை, நீதி, மற்றும், பிறரன்பின் செய்தியை ஊக்குவிப்பது, திருஅவை, மற்றும், கிறிஸ்தவத்தின் அறநெறிசார் கடமை என்று எடுத்துரைத்த திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள், ஓர் உண்மையான அமைதியை உருவாக்குவதற்குப் பணியாற்றுவதே தன் மறைப்பணியாகும் எனக் கூறினார்.  

பல்வேறு இனங்கள், மற்றும், மனநிலைகளைக்கொண்ட மக்களிடையே மோதல்களை முடிவுக்குக் கொணரவும், ஒருவர் ஒருவரை அன்புகூரவும், உடன்பிறந்த உணர்வை ஊக்குவிக்கவும் முயற்சிப்பதே தன் பணி என்றும், திருத்தந்தை புனித 23ம் யோவான் அவர்கள் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 October 2022, 15:17